அதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: சி.வி.சண்முகம் காவல் துறைக்கு கண்டனம்!

அதிமுக அலுவலகம் மீது ஜூலை 11ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததற்கு சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூடிய போது ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. வன்முறை வெடித்த நிலையில் அந்த பகுதியில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதிமுக அலுவலக கதவுகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டோர் உள்ளே சென்றனர்.

அப்போது ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்து சென்றார். அங்கு சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த பிரச்சினையால் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தார். உயர் நீதிமன்றம் ஜூலை 20ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அலுவலக சாவியை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.

அதிமுக அலுவலக தாக்குதல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், “அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தை தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன. அன்றைய தினமே மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் புகார் அளித்தார். அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் காவல்துறையே ஒரு புகாரை உதவி ஆய்வாளர் மூலம் பதிவு செய்து, புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.

குற்ற சம்பவம் நடைபெற்று 53 நாள்கள் ஆகிறது, நான் புகார் அளித்து 41 நாள்கள் ஆகிறது ஆனால் காவல் துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.