விலை இல்லை; முளைப்பு விட்டதால் வேதனை; 40 டன் சின்னவெங்காயத்தை தண்ணீரில் கொட்டி அழித்த விவசாயி!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள சானமாவு கிராமத்தைச் சேர்ந்த 27 வயதாகும் இளைஞர் அனில்குமார், ஒரு பி.காம் பட்டதாரி. விவசாயத்தின் மீதான காதலால் தனக்குச் சொந்தமான நிலத்தில் பயிர்ச் செய்ய பழகினார். விளைப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்கவும் கற்று கொண்டார். இந்த நிலையில், 5 ஏக்கர் நிலத்தில் மருத்துவ குணம் கொண்ட சின்ன வெங்காயத்தை பயிரிட்டிருந்தார்.

அவர் உழைப்புக்கேற்ற நல்ல விளைச்சலும் கிடைத்தது. ஆனால், அறுவடை சமயத்தில் மழை கொட்ட ஆரம்பித்ததால், சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு 50 கிலோ சின்ன வெங்காய மூட்டை ஐந்தாயிரம் ரூபாய் முதல் 8,000 ரூபாய் விரை விற்பனையானது. தற்போது, அதே அளவிலான மூட்டை 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. இதை வாங்குவதற்கும் வியாபாரிகள் முன்வராததால் சின்ன வெங்காயம் விளைவித்த விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

சின்ன வெங்காயம்

அனில்குமாரும் தன்னுடைய நிலத்தில் அறுவடை செய்த சுமார் 40 டன் சின்ன வெங்காயத்தை 700 மூட்டைகளாக கட்டி அருகிலுள்ள குடோனை வாடகைக்கு எடுத்து விற்பனைக்காக வைத்திருந்தார். ஒரு மாதத்துக்கு மேலாகியும் அவற்றை வாங்க வியாபாரிகள் யாரும் வராததால், வெங்காயம் முளைப்பு விட ஆரம்பித்தது. இன்னும் ஒரு வாரம் விட்டால், அழுகிவிடும் என்ற நிலை இருந்ததால், வேதனையடைந்த அனில்குமார், கூலி ஆட்களை வைத்து குடோனிலிருந்த வெங்காய மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிச்சென்று மழைநீர் குட்டையில் கொட்டி அழித்தார். 700 மூட்டை சின்ன வெங்காயம் அழிக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, விவசாயிகளின் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி அனில்குமாரிடம் கேட்டபோது, ‘‘இந்த முறை சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகம். ஏராளமான விவசாயிகள் பயிர் செய்திருக்கிறார்கள். ஆனால், உரிய விலை கிடைக்காதது மட்டுமின்றி யாரும் வாங்க முன்வராதது மன வேதனையை ஏற்படுத்திவிட்டது. ரூ.15,000 கொடுத்து குடோனை வாடகைக்கு எடுத்து வெங்காய மூட்டைகளை வைத்திருந்தேன்.

முளைப்பு விடும் முன்னர் வியாபாரிகள் பலரை அழைத்து இலவசமாக எடுத்துச் செல்லவும் சொல்லியிருந்தேன். யாரும் வரவில்லை. அழுகி வீணாவதற்கு கொட்டிவிடலாம் என்று முடிவு செய்து தான், இந்த முடிவை எடுத்தேன். குடோனிலிருந்து அப்புறப்படுத்தி அழிக்கவும் பத்தாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. சின்ன வெங்காயத்தை பயிரிட்டதால், பல லட்ச ரூபாய் எனக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசு எனக்கு இழப்பீடு வழங்கி, வாழ்தாரத்தை காப்பாற்ற வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அழிக்கப்பட்ட சின்ன வெங்காயம்

விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பேசினோம். ‘‘ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலவும் சீதோஷ்ண நிலையைப் பயன்படுத்தி விவசாயிகள் 50,000 ஏக்கர் நிலங்களில் காய்கறிகளைப் பயிர்ச் செய்து வருகிறார்கள். குறிப்பாக முட்டைக்கோஸ், காலிஃபிளவர், சௌசௌ, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை விளைவிக்கிறார்கள். அதேபோன்று கொத்தமல்லி, புதினாவையும் பல்லாயிரம் ஏக்கர்களில் பயிர்ச்செய்து சென்னை, கோவை, மதுரை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புகிறார்கள்.

மருத்துவ குணம் கொண்ட வெள்ளரி மற்றும் சிறிய வெங்காயம் போன்றவற்றையும் விளைவித்து ஏற்றுமதி செய்கிறார்கள். விவசாயிகள் பயிர்ச் செய்தவுடன் நிலங்களில் வந்து வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக, ஓசூரில் இருந்து தினமும் 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

எனவே, தமிழக அரசின் வேளாண்மைத்துறை இந்த பகுதியில் காய்கறி சேமிப்பு கிடங்குகளை அதிகளவில் அமைக்க வேண்டும். தக்காளி அதிகம் விளையும் இந்த பூமியில் தக்காளியைச் சேமிப்பதற்கும் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். சின்ன வெங்காயம் பயிரிட்டதால் பாதிக்கப்பட்ட சானமாவு விவசாயி அனில்குமாருக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.