இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனல் கண்ணன், இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சியே. தொடர்ந்து இந்துக்களுக்காக போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டைப் பயிற்சி இயக்குநருமான கனல் கண்ணன், இந்து முன்னணி அமைப்பின் சார்பாக கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தின் போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கனல் கண்ணன் கூறினார். இது குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, புதுச்சேரியில் இருந்த கனல் கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.
புழல் சிறையிலிருந்து விடுதலையான அவருக்கு இந்து முன்னணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சியே. தொடர்ந்து இந்துக்களுக்காக போராடுவேன்”. என்று தெரிவித்தார்.