தென் மாநிலங்களில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. முந்தைய தேர்தல்களில் பாஜகவின் வாக்கு வங்கி குறைவாக இருந்தாலும், அம்மாநிலத்தில் அக்கட்சி கணிசமாக வளர்ந்து வருகிறது. தெலங்கானா மாநில உருவாக்கத்துக்கு பிறகு, தெலங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அம்மாநிலத்தில் தொடர்ந்து முதல்வராக உள்ளார்.
கடந்த முறை சட்டமன்றத்தை கலைத்து விட்டு முன்னரே தேர்தலை சந்தித்த சந்திரசேகர ராவ், அந்த சமயத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதன்பிறகு அமைதியாகி விட்டார். தற்போதும், மீண்டும் அங்கு தேர்தல் வரவுள்ளதால், மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து விட வேண்டும் என முன்பை விட பாஜக மீது அதிக சீற்றத்தை அவர் காண்பித்து வருகிறார். அவரை வீழ்த்த அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் எதுவும் வலுவாக இல்லாததால் அதனை தக்க வைத்துக் கொள்ள பாஜக முயற்சி செய்து வருகிறது.
பிரதமர் மோடி தொடங்கி தெலங்கானா மாநிலத்தில் பாஜக தலைவர்கள் தொடர் விசிட் அடித்து வருகிறார்கள். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலங்கானா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஆனால், அவருக்கு அம்மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக நிர்மலா சீதாராமனின் கான்வாயை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பேனரில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியில் மத்திய அரசின் மானியம் அதிகமாக இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஏன் வைக்கவில்லை என தனக்கே உரித்தான பண்ணையார் தொனியில் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் வைப்பேன். ஐஏஎஸ் படித்து, மத்திய அரசுக்கு விஸ்வாசமாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?” என்றும் அப்போது நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பேசினார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐஏஎஸ் படித்தது மக்களுக்கு சேவையாற்றவே தவிர, மத்திய அரசுக்கு சாமரம் வீசி விஸ்வாசமாக நடந்து கொள்வதற்கல்ல என்று நிர்மலா சீதாராமனுக்கு தெரியுமா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேசமயம், மத்திய, மாநில அரசுகள் ஒன்றும் தங்களது பாக்கெட்டில் இருந்து எடுத்து மானியம் தருவதில்லை. நலத்திட்டங்களை மேற்கொள்வதில்லை. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி இருக்கும்போது, பிரதமர் மோடியின் படத்தை ஏன் வைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்துக்கு மல்லுக்கட்டும் நிர்மலா சீதாராமன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் மீதான கடன் அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
சிலிண்டரில் மோடி படம்
பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி இதுகுறித்து கூறுகையில், “சுயவிளம்பரம் தேடும் மிகவும் அவமானகரமான விஷயம் இது. அதிக பட்சம், மோடி புகைப்படம் இல்லாதது குறித்து புகார் தெரிவித்து, பொது விநியோகத் துறை அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதியிருக்கலாம்.” என கடுமையாக சாடியுள்ளார். நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிலிண்டர் விலையேற்றத்தை குறிக்கும் வகையில், எரிவாயு சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி டிஆர்எஸ் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.