ஆன்லைனில் உணவுகளை விநியோகிப்பது மட்டுமல்லாமல், பலசரக்கு மளிகைப் பொருள்களையும் `இன்ஸ்டாமார்ட்’ (Instamart) மூலம் ஸ்விக்கி விநியோகித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஸ்விக்கியில் அதிகமாக ஆர்டர் செய்யப்படும் பொருள்கள் குறித்தும், விநியோக வளர்ச்சி குறித்தும் ஸ்விக்கி கணக்கெடுப்பை மேற்கொண்டது.
அதில், மும்பையில் கடந்த ஓராண்டில் ஆணுறைகளின் ஆர்டர்கள் 570 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இன்ஸ்டாமார்ட்டின் வளர்ச்சி 16 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி மற்றும் சென்னை போன்ற மெட்ரோ நகர மக்கள் அதிகப்படியாக இன்ஸ்டாமார்ட்டை உபயோகித்துள்ளனர். இந்நகர மக்கள் அதிகமாக வாங்கிய பொருள்கள் குறித்த விவரங்களின் கணக்கெடுப்பு:
* நாப்கின், மென்ஸ்ரட்ல் கப்ஸ் மற்றும் டேம்பான்ஸ் ஆகியவை அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 2021-ல் சுமார் 2 மில்லியன் யூனிட்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டில் 45,000 பாக்ஸ் பேண்டேஜ்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, ஐஸ்கிரீம் களுக்கான ஆர்டர்கள் 42 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதிலும் இரவு 10 மணிக்கு மேல்தான் பெரும்பாலான ஆர்டர்கள் வந்துள்ளன.
* இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட்கள் 5.6 மில்லியன் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.
* கோடைக்காலத்தில் 27,000 பிரஷ் ஜூஸ் பாட்டில்கள் ஹைதராபாத் மக்களால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
* 50 மில்லியன் முட்டைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர், டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்கள் சராசரியாக 6 மில்லியன் முட்டைகளை ஆர்டர் செய்துள்ளன.
* 30 மில்லியன் பால் ஆர்டர்கள், பெங்களூர் மற்றும் மும்பையில் காலை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோயா மற்றும் ஓட்ஸ் பால் உள்ளிட்ட பால் அல்லாத பால் பொருள்களை அதிக அளவில் பெங்களூர் ஆர்டர் செய்துள்ளது.
* அவல் மற்றும் உப்புமா போன்ற ரெடி டு ஈட் உணவுகளை இரவு நேர உணவின்போது பெங்களூர், டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்கள் ஆர்டர் செய்துள்ளன.
* கடந்த ஆண்டில் 62,000 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆர்டர் செய்யப்பட்டன. 12,000 ஆர்டர்களுடன், ஆர்கானிக் பொருள்களை வாங்குபவர்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
* ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு நகரங்களும் சேர்ந்து, கடந்த 12 மாதங்களில் 290 டன் பச்சை மிளகாயை ஆர்டர் செய்துள்ளன.
* கடந்த ஒரு வருடத்தில் குளியலறை சுத்தம் செய்யும் பொருள்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்றுள்ளன.