கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வேளாண்மை – உழவர் நலத்துறை அனைத்துத் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களோடு இணைந்து விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாரும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட நெல் (20%) , சிறு தானியங்கள் (62.9%), எண்ணெய் வித்துகள்(25%) இலக்கை எட்டுவதில் கடந்த ஆண்டைவிட குறைவான நிலை உள்ளது. காய்கறிகள் சாகுபடி இலக்கிலும் 15.36% மட்டுமே எட்டப்பட்டுள்ளது. இது கவலை அளிக்கிறது. 50% மானியம் உள்ள முதலமைச்சரின் மானவாரி நிலமேம்பாட்டு இயக்கத்தின் விதை மற்றும் இடுபொருட்கள் விநியோகத் திட்டத்திலும் 22% மட்டுமே எட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரும் அமைச்சர் பெருமக்களும் எவ்வளவு அக்கறை காட்டினாலும் அரசு வகுக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட, வட்டார அளவிலான அதிகாரிகள் ஈடுபாடு காட்டினால்தான் இலக்குகளை எட்ட முடியும்” என்றார்.
மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக சட்டம் இயற்றவேண்டும் என்பது நமது விவசாயிகள் மட்டுமல்ல இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளின் கோரிக்கை. முதலமைச்சரும் அதை வலியுறுத்தியிருக்கிறார். இந்த சட்டத்தை இயற்றுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்போது ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தினார்.
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் வேளாண்மைத் தொழில் சார்ந்த மக்களின் மேம்பாட்டுக்காகஅத்துடன் கோரிக்கை மனு ஒன்றையும் அமைச்சரிடம் அவர் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: “சாந்தகுமார் குழு பரிந்துரைப்படி Negotiable Warehouse Receipt System முறையை தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற ஒன்றிய அரசை வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை எளிதாகப் பெறக்கூடிய வாய்ப்பை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி ஒன்றை துவக்கவும், வானூர் வட்டத்தில் உளுந்து பதனிடும் அலகு ஆலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.