வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வார்சாவ்: ‘ இந்தியர்கள் ஒட்டுண்ணிகள்’, ஊடுருவல்காரர்கள் என போலந்து நாட்டில் இந்தியர் ஒருவரை அமெரிக்காவை சேர்ந்தவர் விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரத்தில் நான்கு இந்தியப் பெண்களை மெக்சிகோ அமெரிக்கப் பெண் இனரீதியாக வசைப்பாடி, தாக்குதலிலும் ஈடுபட்டார். அப்பெண், இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர். நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் இருக்கின்றனர். உங்கள் இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் ஏன் நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள். நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்’ எனக்கூறியுள்ளார்.
இது குறித்த வீடியோ வெளியானதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். கடந்த 21 ம் தேதி, கலிபோர்னியாவில் ஜெயராமன் என்ற இந்தியரை, அமெரிக்கர் ஒருவர் இனரீதியாக விமர்சித்தும், மதத்தை குறிப்பிட்டும் திட்டியிருந்தார்.
இந்நிலையில், போலாந்து நாட்டிலும், அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்தியரை இனரீதியாக கடுமையாக விமர்சித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தும், அந்த இந்தியர் குறித்த விவரமும் தெரியவில்லை. அமெரிக்காவை சேர்ந்தவர் தான் இந்த வீடியோவை எடுத்ததாக தெரிகிறது.
திட்டும் நபர், தன்னை அமெரிக்காவை சேர்ந்தவன் எனவும், வெள்ளை இனத்தை சேர்ந்தவன் எனவும் அடையாளப்படுத்தி கொண்டு அவர் இந்தியரை பார்த்து கூறுகையில், போலந்தில் ஏன் வசிக்கிறாய்? என கேள்வி எழுப்பி வீடியோ எடுத்துள்ளார்.
அதற்கு இந்தியர், என்னை ஏன் வீடியோ எடுக்கிறாய் என கேட்டதற்கு, அந்த நபர், ‘ காரணம் நான் அமெரிக்கன். அமெரிக்காவிலும் உன்னைப் போன்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர். போலந்திற்கு ஏன் வந்துள்ளாய்? போலந்திலும் ஊடுருவலாம் என நினைக்கிறாயா? உங்களுக்கு சொந்த நாடு உள்ளது. உங்களது நாட்டிற்கு திரும்பி செல்ல மாட்டீர்களா.
எங்களின் கடின உழைப்பை எடுத்து கொள்ள வெள்ளைக்காரர்களின் நிலத்திற்கு ஏன் வந்துள்ளீர்கள் என ஐரோப்பியர்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். உங்களது சொந்த நாட்டை கட்டமைக்காதது ஏன்? ஒட்டுண்ணியாக இருப்பது ஏன்?
எங்களது இனத்தை படுகொலை செய்கிறீர்கள். நீங்கள் ஊடுருவல்காரர்கள். சொந்த நாட்டிற்கு செல்லுங்கள் ஊடுருவல்காரர்களே. ஐரோப்பாவிற்கு நீங்கள் தேவையில்லை. போலந்து, போலந்து நாட்டினருக்கே. நீங்கள் போலந்து நாட்டை சேர்ந்தவர் இல்லை ‘ எனக்கூறியுள்ளார். அதற்கு, இந்தியர் எந்த பதிலையும் சொல்லாமல் சென்ற நிலையில், அந்த அமெரிக்கர் அவரை விரட்டி விரட்டி திட்டியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement