இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர்மழையால் 400 குழந்தைகள் உள்பட 1100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3-ல் ஒருபங்கு வெள்ளத்தால் மிதப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாகிஸ்தானுக்கு ‘உயர்மட்ட அவசர எச்சரிக்கை’ விடுத்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்யத் தொடங்கிய பருவமழையானது இன்னும் ஓய்ந்த பாடில்லை.
இதனால் எப்போதும் விவசாயத்துக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகள் கூட வெள்ளக்காடாக மாறியது.
400 குழந்தைகள் பலி
தொடர்ந்து பருவமழை இன்னும் முடியாமல் கனமழையாக கொட்டித்தீர்த்து வருகிறது. வழக்கக்கமாக பெய்யும் மழையை விட 10 மடங்கு அதிககமாக பெய்துள்ளதாக அங்குள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை பெய்த மழையினால் 400 குழந்தைகள் உள்பட 1100 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்
மழை வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு வந்த பின்னரும் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் பாகிஸ்தான் நாட்டின் 3-ல் ஒருபகுதி நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகியுள்ளது. பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, அதில் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்களும் நாசமாகின.
பட்டினி கொடுமை அதிகரிக்கும்
இதனால் தற்போது உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பட்டினி கொடுமை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஏளமான குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் உள்ள இந்த உள்கட்டமைப்புகளை சீர்படுத்த எப்படியும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனால் நிலைமையை சீர்படுத்த அவசர நிலையை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு எச்சரிக்கை
இதேபோல், கனமழையால் சிந்து நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பார்ப்பதற்கு அந்த நதி ஏரி போல் சுமார் 10 கி.மீ அகலத்திற்கு விரிந்து காணப்படுகிறது. நதியின் நீளம்தான் பத்து கிலோ மீட்டர் அளவிற்கு இருக்கும் ஆனால் பாகிஸ்தானில் சிந்து நதியானது 10 கிமீ அகலம் விரிந்து காணப்படுவது பலரையும் வியக்க வைத்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் ‘உயர்மட்ட அவசர எச்சரிக்கை’ விடுத்துள்ளது.
நிலைமை இன்னும் மோசமாகும்
அதிக இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், அந்நாட்டில் நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வைட்டமின் பற்றாக்குறையாலும் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் சில இடங்களில் மருத்து உதவி மையங்கள் செயல்படாத நிலையில் உள்ளதால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு முயன்றவரை அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.