கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள குண்ணாகவுண்டன்பட்டியைச் சேர்ந்தர் மருதை (59). இவர், தோகைமலை அருகே பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக 6 முதல் 8 ம் வகுப்பு படிக்கும் 11 மாணவ, மாணவிகளை ஆபாசமாக திட்டி, தவறான நோக்கத்துடன் அவர்களை தொட்டதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி லாரா புகார் அளித்தார்.
அவர் அளித்த அந்த பாலியல் புகாரின் அடிப்படையில், ஆபாசமாக திட்டுதல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் மருதை மீது வழக்கு பதிவு செய்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அவரை நேற்று கைது செய்தனர். இந்த நிலையில், ஆசிரியர் மருதை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த, அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், திடீரென ஆசிரியர் மருதைக்கு ஆதரவாக போராடட்த்தில் குதித்தனர்.
ஆசிரியரை பொய் வழக்கிலிருது விடுவிக்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன் போராட்டத்தில் ஈ டுபட்டனர். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால், அவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினர்.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் நடத்தும் இந்த போராட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் கவனத்துக்கு செல்ல, உடனடியாக ஸ்பாட்டுக்கு விரைந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.
போராட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் சிலர், “அறிவியல் ஆசிரியர் மருதை கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவர் மீது எந்த ஒரு ஒழுக்கமற்ற முறை மற்றும் பாலியல் குறித்த புகார் இதுவரை வந்ததில்லை. இந்த பள்ளிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்ற தலைமை ஆசிரியை, ஆசிரியர் மருதை மீதான தனிப்பட்ட ஈகோ பிரச்னைக்காக, அவரை பழிவாங்க இப்படி மாணவிகளை கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதனால், வேண்டுமென்றே மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர் மீது தவறான புகார் கொடுக்க சொல்லி வற்புறுத்தி எழுதி வாங்கியிருக்கிறார்.
‘இதை உங்களது பெற்றோர்களிடம் மற்றும் வெளியில் உள்ள நண்பர்களிடம் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்’ எனக் கூறி பாலியல் புகார் கடிதம் எழுதி வாங்கி, அதை வைத்து ஆசிரியர் மருதை மீது தலைமை ஆசிரியை பொய்புகார் கொடுத்துள்ளார். அதன்காரணமாகவே, நல்ல, நேர்மையான உள்ள ஆசிரியரை கைது செய்துள்ளனர். அவர் மீது உள்ள புகாரை திரும்ப பெற்று, ஆசிரியரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால், வரும் திங்கட்கிழமை முதல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்” என்று எச்சரித்தனர்.
ஆனால், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலோ, “தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரிலும், மாவட்ட சைல்ட் லைன் விசாரணை செய்து பெற்ற புகாரின் அடிப்படையிலும் தற்போது ஆசிரியர் மருதை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு சில பெற்றோர்கள் வேண்டுமென்றே இது போல் தேவையில்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்” என தெரிவித்தனர்.
ஆனால், காவல்துறை சரியாகாக விசாரிக்காமல் கைது செய்துள்ளதால், மேலதிகாரிகளின் அழுத்தத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக பேசி வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் தெரிவித்தனர்.