TNPSC Group 4 VAO exam cut off and Vacancy details: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும்? கூடுமா? குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: நீதித்துறை வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
இந்த ஆண்டு குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக கூறப்பட்டது. தமிழ் பகுதி எப்போதும் போல் இருந்தநிலையில், பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாகவும், விடையளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். இதனால் தேர்வு நடந்த முடிந்ததில் இருந்தே கட் ஆஃப் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளிவரத் தொடங்கின.
தேர்வு கடினமாக இருந்ததால் கட் ஆஃப் குறையும் என சிலர் தெரிவித்தனர். அதேநேரம் காலியிடங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் கட் ஆஃப் குறைய வாய்ப்பில்லை என சிலர் தெரிவித்தனர். இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் கூடுமா? குறையுமா? உண்மை நிலை என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் குறையும் என்று கூறும் நிபுணர்களின் வாதம் என்னவெனில், சமீபத்தில் அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணி ஓய்வு காரணமாக ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளனர், இதனால் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலைகளில் அதிக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே குரூப் 4 தேர்வில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை விட, நிரப்பப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது குரூப் 4 தேர்வில் சுமார் 1500 இடங்களுக்கு மேல் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும், கடந்த குரூப் 4 தேர்வுகளிலும் அறிவிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, அதிலும் இந்த ஆண்டு எதிர்ப்பார்த்த காலியிடங்களின் அறிவிப்பை விட குறைவாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால், நிச்சயம் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் கட் ஆஃப் குறையும் என்று கூறுகின்றனர்.
அடுத்ததாக, இதுவரை நடந்த குரூப் 4 தேர்வுகளில் பொது ஆங்கிலம் விருப்ப பாடமாக இருந்தது. ஆனால், இந்த தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், ஆங்கில தாள் நீக்கப்பட்டது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளை படிப்புகளை ஆங்கிலத்தில் படித்தவர்கள், தமிழ் பாடத்தை முழுமையாக படிக்க சிரமப்பட்டிருப்பார்கள். அதேநேரம், தமிழ் தாளை விட ஆங்கிலம் எளிதாக இருந்ததால், முன்னர் நடந்த தேர்வுகளில் ஆங்கிலம் தாள் எடுத்து தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தமுறை அத்தகைய வாய்ப்பு இல்லாததால் அவர்களின் போட்டி குறையலாம். இதன் காரணமாகவும் கட் ஆஃப் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம் கட் ஆஃப் குறைய வாய்ப்பில்லை, கடந்த ஆண்டு அளவிலே இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது என்னவெனில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை குறைவு. என்னதான் காலியிடங்கள் உயர்த்தப்பட்டாலும், தேர்வு கடினமாக இருந்ததாக கூறப்பட்டாலும், கட் ஆஃப் குறைய வாய்ப்பில்லை. ஏனெனில் கடந்த முறையே ஒரே கட் ஆஃப் மதிப்பெண்களில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கூட இருந்தனர். அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வு நடக்காத நிலையில், 2 ஆண்டுகளாக இலட்சக்கணக்கானோர் இந்த தேர்வை எதிர்நோக்கி தயாராகி வந்தனர். எனவே அதிகமானோர் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த ஆண்டும் ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் அதிகமான தேர்வர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.
மேலும் குரூப் 2 தேர்வு நடந்து அடுத்த 2 மாதத்திலே குரூப் 4 தேர்வு நடந்ததால், குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வந்த அனைவரும் குரூப் 4 தேர்வை எழுதியிருப்பர். குரூப் 4 தேர்வும் கிட்டத்தட்ட குரூப் 2 தேர்வு வினாத்தாள் மாடலிலே இருந்ததால், குரூப் 2 தேர்வுக்கு நன்றாக படித்தவர்கள், குரூப் 4 தேர்வில் சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். இந்தக் காரணங்களால், குரூப் 4 தேர்வு கட் ஆஃப் குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனால் நிபுணர்களின் கருத்துக்களை ஒட்டுமொத்தமாக தொகுத்து பார்க்கையில் குரூப் 4 கட் ஆஃப் கடந்த ஆண்டு மதிப்பெண்களை ஒட்டியே இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பெரும்பாலான நிபுணர்களின் கருத்துப்படி கட் ஆஃப் மதிப்பெண்கள் 2 முதல் 3 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil