கலைகள் பெரும்பாலும் தமிழகத்தில் நிறைந்து இருக்கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு கலைகளும் ஒரு பாலினம் தொடர்புடையதாக இருக்கும். ஆனால் எல்லா கலைகளுக்கும் தொடர்புடைய ஒரு பாலினம் ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது மூன்றாம் பாலினம்தான். அவர்களில் ஒருவரைதான் நாம் திருநங்கைகள் என்று அழைப்போம். அப்படி அழைக்கிற திருநங்கைகள் ஒரு காலத்தில் கேலி பொருளாக பார்க்கப்பட்டவர்களாகவே இருந்து வந்தார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இப்போது சமூகத்தில் தங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை அழுத்தமாக பதித்து வருகிறார்கள் திருநங்கைகள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அந்த வகையில் திருநங்கைகள் என்றால் இப்படித்தான் என்று இல்லாமல் திருநங்கைகளும் இப்படி இருப்பார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தன்னுடைய கலை மூலமாக வருகின்ற வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துகிற திருநங்கைகளை சந்தித்தோம் நாம். நடனக் கலையில் ஆர்வமுள்ள திருநங்கைகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எந்திலி கிராமத்தில் வசிக்கிறார்கள்.
கோயில் திருவிழா, மற்றும் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், நண்பர்கள் கூட்டம் என பல இடங்களிலும் கிராமிய கலைகளை நடனங்களாக வழங்கி வருகிறார்கள் இந்த திருநங்கைகள். அதில் வருகின்ற வருமானத்தை வைத்து தன் குடும்பத்தை நடத்தும் இந்த எளிய மனிதர்களைப் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
“என் பெயர் வித்யா. எனக்கு வயசு 27. நான் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்து இருக்கிறேன். கடந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி என் உடம்புல ஏற்பட்ட பாலின மாற்றம் என்னை எங்க வீட்டுகிட்டே இருந்து பிரிச்சுது. ஆனாலும் எங்க வீட்ல இருக்கவங்க பெரிய மனசு பண்ணி என்ன வீட்டோட சேர்த்துக்கிட்டாங்க.
திருநங்கையா இருந்துட்டு ஒரு டிப்ளமோ இன்ஜினியரா வேலை செய்றது அப்படிங்கிறது ரொம்ப சிரமம். அந்த நேரத்தில் தான் ராஜஸ்ரீ, பாவிஷா, ஸ்வேதா என்ற மூன்று திருநங்கைகளை நான் சந்தித்தேன். அவர்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்தவர்கள் தான். அவர்களோடு சேர்ந்து ஏதாவது தொழில் செய்யலாம் என்றால் யாரும் எங்களுக்கு வேலை தருவதற்கு முன் வரவில்லை. இந்த நிலையில் தான் நாங்கள் ஒரு முடிவெடுத்தோம்.
திருநங்கைகள் என்றாலே பாடல், கேலி, கிண்டல், நடனம் என எல்லாம் இருக்கும் என எதிர்பார்ப்பார்கள் சாதாரண மக்கள். ஏன் அதையே கலையாக மாற்றக்கூடாது? அந்த கலையை ஏன் வருமானத்திற்கு பயன்படுத்தக் கூடாது? இப்படி நினைத்த போது உருவானது தான் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு “தமிழ் இசை கலைக்குழு”.
இந்த கலைக்குழுவை நாங்களே உருவாக்கினோம். சுமார் ஏழு பேர் கொண்ட குழுவாக இது உருபெற்றது. இந்த குழுவில் ஒரு முக்கிய நிபந்தனை எந்த இடத்திலும் ஆபாச நடனங்கள் ஆடக்கூடாது என்று. கோயில் திருவிழாக்களில் அம்மன் வேடமிட்டு ஆடுவது, கிராமிய பாடல்களுக்கு கிராமிய உடையணிந்து ஆட்டம் ஆடுவது. நண்பர்கள் விழா மற்றும் குடும்ப நிகழ்ச்சி போன்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் நடனமாடுவது என்று முடிவு செய்து நடனமாட தொடங்கினோம்.
பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் கோயில் விழா நடைபெறும். அங்கு அம்மன் வேடமிட்டு ஆடுவது, கரகம் வைத்து ஆடுவது, கிராமிய பாடல்கள் கிராமிய உடை அணிந்து ஆட்டம் ஆடுவது என இரவு முழுவதும் நடக்கும் எங்கள் நடன நிகழ்ச்சி. எல்லாம் முடிந்தவுடன் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை தருவார்கள். இன்னும் நிறைய ஊர்களில் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே தருவார்கள். வாடகை துணி, மேக்கப் என மூவாயிரம் வரை செலவாகும். மீதம் இருக்கிற பணத்தை நாங்கள் பிரித்துக் கொள்வோம். ஆடி மாதம் தான் அதிக அளவு நிகழ்ச்சி இருக்கும் மற்ற நாட்களில் ஏதாவது நிகழ்ச்சி வராதா என்று ஏங்கிக் கிடப்போம். திருநங்கை என்றாலே இப்படித்தான் என்கிற நிலையை மாற்றி இப்படியும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே இந்த கலைக்குழு செயல்படுகிறது.
சில அரசு நிகழ்ச்சிகளுக்கும் எங்களை அழைத்து இருந்தார்கள்.” இல்லம் தேடி கல்வி’ நிகழ்ச்சிகளுக்காக கலை பயணம் தொடங்கினோம். இதுபோன்று அரசு ஏதாவது எங்களுக்கு நிகழ்ச்சி வழங்கினால் எங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அது மட்டுமல்லாமல் சுய தொழில் செய்வதற்கு அரசு நிதி உதவி வழங்கினால் எங்களால் முடிந்த வேலைகளை செய்து எங்களையும் எங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் வித்யா.
எல்லோருக்குள்ளும் ஒரு கலை மறைந்திருக்கிறது என்பார்கள். அப்படி இந்த திருநங்கைக்குள்ளே ஒரு நடனக் கலை மறைந்திருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள் இவர்கள். எல்லோரும் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இவர்கள் வாழ்வும் சிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
– ஜோதி நரசிம்மன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM