கொடைக்கானல்: கொடைக்கானலில் பல ஆண்டுகளாக சாலை வசதியில்லாத வெள்ளக்கெவி கிராமத்துக்கு சாலை அமைத்த கோட்டாட்சியர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அவரை சந்தித்து கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கொடைக்கானலில் சாலை வசதியில்லாத மலை கிராமங்கள் பல உள்ளன. குறிப்பாக, நூறு ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் நகர் உருவாக ஆங்கிலேயர்களுக்கு உதவியவர்கள் வெள்ளக்கெவி கிராம மக்கள். ஆங்கிலேயர்களை தங்கள் தோள்களில் பல்லக்கு உதவியுடன் தேனி மாவட்டம், பெரியகுளம் வழியாக சுமந்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கொடைக்கானல் நகர் உருவாக காரணமாக இருந்த கிராம மக்களோ, பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி கரடு முரடான பாதை வழியாக 6 கி.மீ.க்கு மேல் நடந்து சென்று வந்தனர்.
இக்கிராமத்தில் 150-க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசிக்கி ன்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம்தான். இவர்கள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை தலைச்சுமையாகவும், குதிரைகள் மூலமாகவும் எடுத்துச் சென்று விற்பனை செய்தனர்.
உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகளை அவசர காலத்தில் ‘டோலி’ கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இதனால் மருத்துவமனையை அடையும் முன்பே, பலர் உயிரிழந்த துயர நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்தது.
இவர்கள் தங்கள் கிராமத்துக்கு சாலை அமைக்க அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் பல ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், 2021-ல் கொடைக்கானல் கோட்டாட்சியராக முருகேசன் பொறுப்பேற்றார். அவரிடமும் இக்கிராம மக்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து 2022, பிப்ரவரியில் வட்டக்கானல் பகுதியில் இருந்து வெள்ளக்கெவி கிராமத்துக்கு சாலை அமைக்கும் முயற்சியை ஆர்டிஓ தொடங்கினார்.
அப்போது ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை ஏற்பட்டது. சாலை அமைக்க இடம் தர மறுத்த வனத்துறை, பட்டாதாரர்களை அழைத்து, கோட்டாட்சியர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது வட்டக்கானல் பகுதியில் இருந்து டால்பின் நோஸ் வழியாக வெள்ளக்கெவி உள்ள பகுதியில் பட்டா நிலம் வரை 6 கி.மீ.க்கு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சாலை அமைத்த மகிழ்ச்சியில் கோட்டாட்சியர் முருகேசனை தங்கள் கிராமத்துக்கு தாரை, தப்பட்டையுடன் கிராம மக்கள் அழைத்துச் சென்று ஆரத்தி எடுத் தும், பொன்னாடை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
இந்நிலையில், இரு நாட் களுக்கு முன்பு கோட்டாட்சியர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட தகவல் கிடைத்து அதிர்ச்சி அடைந்தனர். விரைவில் மண் சாலையை தார்ச்சா லை யாக மாற்றி தருவார் என நம்பிக்கையோடு காத்திருந்த கிராம மக்களுக்கு இத்தகவல் கவலையை தந்தது.
இருப்பினும் ஆர்டிஓவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கிராமத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அப்போது உணர்ச்சி பெருக்கில் ஆர்டிஓவும் கண்கலங்கினார். பின்னர் தனது இருக்கையில் சிறுவர்களை அமரவைத்து அவர்களும் எதிர்காலத்தில் இதுபோல அதிகாரியாக வர வேண்டும் என உற்சாகப்படுத்தினார்.
பின்னர் கிராமத்தினரிடம் ஆர்டிஓ, ‘‘அதிகாரிகள் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படுவது வழக்கமானது தான். உங்களைப் போல, நிறைய மக்களுக்கு பணி செய்ய வேண் டும். உங்கள் பிள்ளைகளை படிக்க வையுங்கள்’’ என ஆறுதல் படுத்தினார்.
இதுகுறித்து கோட்டாட்சியர் முருகேசன் கூறுகையில், ‘‘முதற்கட்டமாக வெள்ளக்கெவி கிராமத்தில் பட்டா நிலம் வரை மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மண் சாலையை தார் சாலையாக மாற்ற அரசுக்கு திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும். நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் தார் சாலை அமைக்கப்படும்’’, என்றார்.