நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த 6 வயது சிறுவன், ஒன்றரை நிமிடத்தில், 12 ம் வகுப்பு பாடத்தில் உள்ள 10 தொகுப்புக்கான கனிம அட்டவணையில் உள்ள பெயர்களை கூறி ஆசிய புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். பல சாதனைகளை குவித்துள்ள சிறுவனை, மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சிறுவர், சிறுமிகளுக்கும், பலவிதமான தனித் திறமைகள் இருக்கும். அந்த திறமைகளை வெளியே கொண்டு வர, பெற்றோர் உற்சாகப்படுத்தினால், அந்த சிறார்கள், சாதனை என்ற சிகரத்தை தொடுவார்கள். இதற்கு உதாரணமாக, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த 6 வயது சிறுவன், சிறு வயது முதலே பல்வேறு சாதனைகளை படைத்து, அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறான்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியை சேர்ந்த பிரபுராஜ் – ஆர்த்திஹரிப்பிரியா தம்பதியினர் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகன் சதுர்கிருஷ் ஆத்விக். 6 வயதான இந்தச் சிறுவன், தனது குழந்தை பருவம் முதல் தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். தற்போது பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறர் சதுர்கிருஷ் ஆத்விக்.
திருக்குறள் மீது ஆர்வம் – சாதனை
சதுர்கிருஷ் ஆத்விக், தனது 3 வயது முதலே, உலகப் பொதுமறை நூலான திருக்குறளை ஆர்வமுடன் கற்று வருகிறார். அதன் விளைவாக, 4 வயதில் 53 திருக்குறளை 3 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து அடுத்த சாதனை முயற்சியாக, 100 திருக்குறளை, 5 நிமிடம் 40 நிமிடங்களில் கூறி சாதனை நிகழ்த்தினார். இந்த சாதனைகளை, இந்தியா புக் ஆப் ரிக்காட்ஸ் (India Book of Records), டிரயம்ப் வேல்டு ரிக்காட்ஸ்( Triumph World Records), கிளோபல் ரிக்காட்ஸ் அன்டு ரிசர்ச்சு பவுன்டேஷன் ( Global Records and Research Foundation) ஆகியவை அங்கிகரித்து கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, சிறுவன் சதுர்கிருஷ் ஆத்விக்கை பாராட்டியது.
6 வயதில் புதிய சாதனை
தற்போது. சதுர்கிருஷ் ஆத்விக், தனது 6-வது வயதில் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, 11 மற்றும் 12 – வகுப்பில் பயிலும் வேதியியல் கனிம அட்டவணையில் உள்ள 10 தொகுப்பான கனிமங்களின் பெயர்களை, 1 நிமிடம் 33 விநாடிகளில் கூறி, சாதனை படைத்துள்ளார். சிறுவன் சதுர்கிருஷ் ஆத்விக்கின் இந்த சாதனையை, ஆசியா புக் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது.
பதக்கங்களை குவிக்கும் சிறுவன்
இது தவிர, இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலைநகரம், உலக நாடுகளின் தலைநகரங்களை சரளமாகக் கூறி, பதக்கங்களையும், பரிசு கோப்பைகளையும், விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார் சதுர்கிருஷ் ஆத்விக். இளம் வயதிலேயே சாதனைக்கு மேல் சாதனை நிகழ்த்தி வரும் இந்தச் சிறுவனை, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி, சிறுவனை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளார்.
சாதனைகள் தொடரட்டும்
தமிழ்மேல் கொண்ட பற்றின் காரணமாக, 1,330 திருக்குறளையும் குறைந்த நேரத்தில் கூறி சாதனை படைக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என சாதனை சிறுவன் சதுர்கிருஷ் ஆத்விக் ஆர்வமுடன் தெரிவித்துள்ளார். சிறுவனின் சாதனை பயணம் தொடர அனைவரும் வாழ்த்துவோம்…