தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்காததால் பலியான கர்ப்பிணியின் கணவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த ராமன், கர்ப்பிணியான தனது மனைவி காவேரியை பிரசவத்துக்காக கும்பகோணம் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பணியில் மருத்துவர் இல்லாததால், தனது மனைவியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முறையான சிகிச்சை வழங்காததால் காவேரி உயிரிழந்துள்ளார். இதையடுத்து மருத்துவர்களின் அக்கறையின்மை காரணமாக தனது மனைவி இறந்துவிட்டதாகக் கூறி ராமன், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவின்படி, புதுக்கோட்டை ஊரக சுகாதார பணிகள் துறை இணை இயக்குனரின் விசாரணை அறிக்கையை ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் தாக்கல் செய்தார்.
அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த ஆணையம், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதியும், ரத்த வங்கியும் இல்லாததும், உரிய நேரத்தில் முறையான சிகிச்சை வழங்காததுமே காவேரி மரணத்துக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராமனுக்கு நான்கு வாரங்களில் 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM