“சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் ஊழல்வாதிகள்" – கே.சி.பழனிசாமி காட்டம்

முன்னாள் அதிமுக எம்.பி., கே.சி.பழனிசாமி தலைமையில் விழுப்புரத்தில் அதிமுக உறுப்பினர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கே.சி.பழனிசாமி, “அதிமுக-வில் அம்மாவின் மறைவுக்குப் பிறகு இருக்கும் பிரச்னையே என்னவென்றால், அடிமட்டத்திலுள்ள தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை. பொதுக்குழு உறுப்பினர்களும், கட்சியின் முக்கியஸ்தர்களும் என்ன கருதுகிறார்களோ அதையே கட்சியின் முடிவாக அடிமட்ட உறுப்பினர்கள் இடத்தில் திணிக்கப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்கின்ற கருத்து பொதுவெளிக்கு வருவதில்லை. எம்.ஜி.ஆர் இருக்கும் போது அடிக்கடி மாநாடுகள் நடத்துவார். அப்போது, தொண்டர்களின் கருத்தை அறிந்து தான் அவர் முடிவுகளை எடுப்பார். அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களை கேட்டு அவர் எந்த முடிவையும் எடுக்க மாட்டார். ஆனால், அம்மா காலத்திற்குப் பிறகு இபிஎஸ், ஓபிஎஸை வீழ்த்தினாரா… ஒபிஎஸ், இபிஎஸை வீழ்த்தினாரா… இருவரும் இணைந்து சசிகலாவை வீழ்த்துகிறார்களா… தினகரனோ, இபிஎஸ், ஓபிஎஸை வீழ்த்த முயற்சி செய்து கொண்டிருக்கிறாரா… என்கிற அளவில் தான் அதிமுக யுத்தம் திசை மாறி போகிறது.

கே.சி.பழனிசாமி – விழுப்புரம்

ஒரு அரசியல் கட்சியின் நோக்கம் ஆளுகின்ற கட்சியாக இருக்க வேண்டும், வலிமையான கட்சியாகத் திகழ வேண்டும் என்பதுதான். ஆனால், 2016-ல் அம்மா மறைவுக்குப் பிறகு அந்த நோக்கம் சிதறி…. யார் யாரை வீழ்த்துகிறார்கள் என தலைமை பொறுப்பிற்கு அதிமுக-வில் உட்கட்சி யுத்தம் நடந்து வருகிறது.

அதிமுக மேலும் பலவீனம் அடையும் வகையில் கட்சியில் பிளவுகள் நடப்பதென்பது, பாஜக போன்ற தேசிய கட்சிகள், மதவாத சக்திகள் இங்கு கால் ஊன்றுவதற்கு மட்டும்தான் உதவிகரமாக இருக்கும். அதேபோல, திமுக-வை வலிமை பெற செய்யும் வகையில் தான் அது அமையும். அதிமுக மீண்டும் ஆளுகின்ற கட்சியாக வரவேண்டுமென்றால் அடிப்படை தொண்டர்களால் ஒரு தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஒற்றைத் தலைமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. அதைத்தான் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதில் உள்ள பிரச்னை என்னவென்றால், ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் படைத்தவர் யார் என்பதுதான். எடப்பாடி பழனிசாமியின் உடனிருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள், சுமார் 5 முன்னாள் அமைச்சர்கள் எடுக்கும் முடிவை ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் மூலமாக திணிக்க பார்க்கிறார்கள். எம்.ஜி.ஆரும், அம்மாவும்… உடனிருந்து எதிர்த்தவர்களை வெற்றிகொள்ள வேண்டுமென நினைக்கவில்லை. மாறாக, திமுக-வை விழுத்தி அதிமுக-வை பலப்படுத்த வேண்டும் என நினைத்தார்கள். ஒரு கூட்டணி கட்சிக்கு தகுதியை மீறி 6, 7 சீட் கொடுப்பதற்கு பதிலாக… நம் இயக்கத்தில் பயணித்தவர்களை ஒன்றிணைத்து செயல்பட்டால் அதிமுக வலிமையாக இருக்கும்.

அரங்கம்

இபிஎஸ் ஆகட்டும், ஓபிஎஸ் ஆகட்டும்… இன்றைக்கு சாதிய பார்வை, லஞ்சம், ஊழல்…. நிறைய சம்பாதித்தவர்களுக்கு, நிறைய செலவு செய்தவர்களுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. தொண்டர்கள், முழுமையாக இன்று புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைமை பொறுப்பில் இருக்கிறேன் என்பவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எவ்விதமான நெருங்கிய தொடர்பும் இல்லை. காசைக் கொடுத்தால் கூட்டம் சேர்ந்துவிடும் என நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து பயணிக்கும் என் போன்றவர்களுக்கும், அடிப்படை உறுப்பினர்களின் எண்ணங்களும் புறக்கணிக்கப்படுகிறது. அந்த எண்ணங்களை ஒன்றுதிரட்டி வலிமையான அதிமுக-வை உருவாக்க வேண்டும். இப்போது என்னுடைய முயற்சியென்பது, தமிழ்நாடு முழுக்க ஒரு லட்சம் அதிமுக கிளைகள் ஆரம்பித்து, அவர்களுக்கு ஆன்லைன் மூலம் அடையாள அட்டை வழங்கி வருகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் 100 பேரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 27,000 பேரை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

அந்த ஒரு லட்சம் பேரால் ஒரு கோடி தொண்டர்களை ஒன்றுதிரட்டி, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன தலைமையை ஏற்படுத்த உள்ளோம். அதற்கான தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அப்படி நடத்தப்படும் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படும் தலைமை தான் உண்மையானதாக இருக்கும். ‘பொதுக்குழுவுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது’ எனும் நீதிபதியின் பார்வை தவறானது. எம்.ஜி.ஆர் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்சியின் விதிகளின்படி, “அடிப்படை தொண்டர்களால் தான் அதிமுக தலைமை தேர்வு செய்யப்பட வேண்டும்” என இருக்கிறதே ஒழிய, பொதுக்குழுவால் தலைமை தேர்வு செய்யப்பட வேண்டும் என இல்லை. இந்த தலைமைப் பதவிக்கான போட்டி இதற்குள் முடியாது. எனவே அடிமட்ட தொண்டர்கள் விலகி செல்கிறார்கள், மனச்சோர்வு பெறுகிறார்கள். எனவே, தொண்டர்களிடம் தெளிவான பாதையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் உள்ள 40 மாவட்டங்களிலும் அதிமுக-வின் அடிப்படை தொண்டர்களின் கூட்டத்தை நடத்தி வருகிறோம். இந்தக் கூட்டத்தின் நோக்கம் யாரையும் சிறுமைப் படுத்துவதோ, பெருமைப் படுத்துவதோ இல்லை.

சசிகலா, பன்னீர், பழனிசாமி

தொண்டர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும். சின்னம் முடக்கப்படக்கூடாது, அதிமுக தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வகையிலான ஆபத்தான விளையாட்டை இன்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா, உறுப்பினராகவோ… ஏதேனும் ஒரு பொறுப்பிலோ கட்சியில் இருப்பதில் தவறில்லை. ஆனால், சிறை சென்று திரும்பிய ஒரு நபரை அதிமுக-வின் தலைமையாக வர எந்த தொண்டனும் விரும்பவில்லை. மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், வாக்களிக்க மாட்டார்கள். இன்று அதிமுக சாதிவாரியாக, மண்டல வாரியாக ஒரு பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது தடுக்கப்பட வேண்டும், தகர்க்கப்பட வேண்டும். இபிஎஸ், அதிமுக வளர வேண்டுமென்று போராடவில்லை. தான் முதலமைச்சராக வரவேண்டும், பொதுச்செயலாளராக வரவேண்டுமென்று தான் போராடுகிறார். அதேபோல் தான் ஓபிஎஸும். ஆனால் எங்களின் போராட்டம், அதிமுக இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக. தேர்தல் காலத்தில் வெற்றி பெறுபவர் தான் இயக்கத்தை வழி நடத்த முடியும். அந்த வல்லமை இந்த இருவருக்கும் கிடையாது.

சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இவர்கள் மீது உள்ள வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த பிரச்னையை இன்னும் 3.5 வருடம் ஓட்டுவார்கள். இப்படியே சென்றால் 2026-ம் தேர்தலில் வெல்ல முடியுமா? 2031 சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா எல்லாம் தடி ஊன்றி நடக்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள்” என்றார் ஆவேசமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.