கழிவு மேலாண்மையில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுத்ததற்காக மேற்கு வங்க அரசுக்கு ரூ.3,500 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: கழிவு மேலாண்மையில் கவனம் கொள்ளாமல் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுத்ததற்காக, மேற்கு வங்காள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.3,500 கோடி அபராதம் விதித்து உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு மேற்கொண்ட விசாரணை ஒன்றில், திட மற்றும் திரவு கழிவு மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு பணியில் மேற்கு வங்காள அரசு பெரிய இடைவெளி ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுத்து உள்ளது. நாளொன்றுக்கு நகர்ப்புறத்தில் 2,758 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது.

அவற்றில், 1,268 மில்லியன் லிட்டர் அளவிலான கழிவுநீரே சுத்திகரிக்கப்படுகிறது. 1,490 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கண்டு கொள்ளப்படாமல் விடப்படுகிறது. இதனால் பெரிய அளவில் இடைவெளி ஏற்பட்டு உள்ளது. 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் ரூ.12,818.99 கோடி நிதியானது நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி விவகாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட போதும், மாநில அரசு, கழிவுநீர் மற்றும் திடகழிவு மேலாண்மை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத நிலை காணப்படுகிறது. நீண்ட காலத்திற்கு சுகாதார விசயங்களை ஒத்தி போட முடியாது. மாசுபாடற்ற சுற்றுச்சூழலை வழங்க வேண்டியது மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அரசியல் சாசன கடமையாகும்.

ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் தடையேதும் இல்லாத நிலை காணப்படும்போது, தனது கடமையை மாநில அரசு தவிர்க்கவோ அல்லது காலதாமதப்படுத்துவோ முடியாது. மாசுபாடற்ற சுற்றுச்சூழல் என்பது வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக உள்ளதுடன், அடிப்படை மனித உரிமையாகவும் உள்ளது. அதனால், நிதியில்லை என கூறி இதுபோன்ற உரிமைகளை மறுக்க முடியாது என கடுமையாக சாடியுள்ளது. இதனை தொடர்ந்து, மாநிலத்தில் கழிவு மேலாண்மையில் கவனம் கொள்ளாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட செய்ததற்காக, மேற்கு வங்காள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.3,500 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. அதனை 2 மாதங்களில் செலுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.