செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள ஏராளமானோர் வருகை தந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு ஆங்காங்கே சிசிடிவி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், திருவிழாவுக்கு வந்திருந்த 8 பேரிடம் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே செயின் பறிப்பு நடந்திருந்ததால் சில மணி நேரத்துக்கு பின்னர்தான் அவர்கள் கழுத்தில் இருந்த செயின் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். இதனை தொடர்ந்து 8 பேரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், பட்டுப்புடவை அணிந்திருந்த பெண் ஒருவர் திருவிழா கூட்டத்தில் இருந்த பெண்களின் பின்னால் நெருக்கமாக இடித்துக்கொண்டு வித்தியாசமான நடவடிக்கையில் காணப்பட்டுள்ளார்.
பின்னர் அவர்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை பிடித்து கைது செய்த போலீசார் விசாரணை செய்தனர். அப்போது பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளியாகின. கைதான பெண் பெயர் பாண்டீஸ்வரி. இவருக்கு 23 வயதுதான் ஆகிறது. இவரும் உறவினர்கள் 30 பேரும் சேர்ந்து தலைமுறை தலைமுறையாக திருடி வருவதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். மேலும், திருவிழா போன்ற கூட்டம் அதிகம் கூடும் பகுதியில் இவர்கள் கைவரிசை காட்டுவது வழக்கமாம். பார்க்க குடும்ப பெண்ணை போலவும், பணக்கார தோற்றமுமாக இருக்க பட்டுப்புடவை, நகைகள் அணிந்து கொண்டுதான் ஒவ்வொரு திருட்டிலும் ஈடுபடுவார்களாம். போலீசாருக்கும் இவர்கள் மீது சந்தேகம் வராது.
ஆகையால், கூட்டத்துக்குள் புகுந்து பெண்கள் பின்னாலயே சென்று அவர்கள் அணிந்திருக்கும் செயினை லாவகமாக அறுத்து எடுத்து வந்துவிடுவார்களாம். பாண்டீஸ்வரியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார் அவரிடம் இருந்து 47 சவரன் திருடிய நகைகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும், பாண்டீஸ்வரியின் உறவினர்கள் யார் யார்? இதுவரை எத்தனை நகைகளை அவர்கள் திருடியுள்ளனர்? அவர்களையும் பிடித்து நகைகளை பறிமுதல் செய்ய களத்தில் இறங்கியுள்ளனர்.