உளுந்தூர்பேட்டை: சாப்பிட்ட உணவுக்கு பணமும் கொடுக்காமல், மாமூல் கேட்டு ஓட்டலில் தகராறில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகி உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஓட்டல் தொழில் மட்டும் வேண்டவே வேண்டாம் எனக் கூறும் அளவுக்கு நம் நாட்டில் நிலைமை சென்று கொண்டிருக்கிறது.
எந்த நேரத்தில் யார் வந்து தகராறு செய்வார் எனத் தெரியாத அளவுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். மது அருந்தும் ‘குடி’மகன்களுக்கு தகராறு செய்ய ஏற்ற இடமாக சமீபகாலமாக ஓட்டல்கள் மாறியுள்ளன. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
போதையில் வந்த ஆசாமிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சேலம் புறவழிச்சாலையில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு நேற்று இரவு மதுபோதையில் 3 பேர் சென்றுள்ளனர். பின்னர் ஓட்டலில் உள்ள ஒவ்வொரு வகை உணவையும் அவர்கள் கேட்டு கேட்டு சாப்பிட்டுள்ளனர். அனைத்தையும் சாப்பிட்டு முடித்ததும் அவர்களிடம் ஓட்டல் ஊழியர் பில்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த அவர்கள், “ஓட்டலில் சாப்பாடு எதுவும் சரியில்லை; அப்படியிருக்கும் போது உங்களுக்கு பணம் வேறு தர வேண்டுமா?” என அவர்கள் கேட்டுள்ளனர்.
மாமூல் கேட்டு தகராறு
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள், “உங்களுக்கு சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்லி இருக்கலாமே; அனைத்தையும் சாப்பிட்டு முடித்துவிட்டு இப்படி சொன்னால் என்ன அர்த்தம் எனக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த மூவரும், “சாப்பிட்டதற்கு நாங்கள் பணம் தருவது இருக்கட்டும். முதலில் நீங்கள் எங்களுக்கு மாமூல் தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். ஓட்டல் ஊழியர் மாமூல் தர மறுத்தததால் அங்கு அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
இதையடுத்து, ஓட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் மதுபோதையில் இருந்த மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர்களில் ஒருவர் இந்து முன்னணி அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும், “மதுபோதையில் இருந்ததால் தாங்கள் என்ன செய்தோம் என எங்களுக்கு தெரியவில்லை” என அவர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆப்பாயில் தகராறு
இதேபோல, ஆப்பாயிலில் பெப்பர் அதிகம் இருப்பதாக கூறி ஓட்டலில் சிலர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி – தம்மம்பட்டி சாலையில் ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை 4 பேர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பரோட்டா மாஸ்டரிடம் முதலில் ஆப்பாயில் போட்டு தருமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ஆப்பாயில் கொடுக்கப்பட்டது. ஆப்பாயிலை பார்த்ததும் ஆத்திரமடைந்த அவர்கள், அதில் பெப்பர் (மிளகு) அதிகமாக இருப்பதாக கூறி கடை உரிமையாளரையும், பரோட்டா மாஸ்டரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போஸீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.