சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கத்தில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 3ம் நாளான இன்று மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோல், இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் பிரமோற்சவத்தின் முதல் நாளன்று அம்ச வாகனத்தில் விநாயகர் நான்கு மாத வீதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. அதனை அடுத்து மாலை நெமிலி(மயில்) வாகனத்தை ரெட்டி வம்சத்தினர் பூஜை செய்து மயில் வாகனத்தை தொடங்கி வைத்தனர். மயில் வாகனத்தில் விநாயகர் நான்கு மாத வீதிகளில் விநாயகர் நான்கு மாத வீதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் ஆரத்தி எடுத்து விநாயகரை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறை சார்பில் காணிப்பாக்கம் நகரம் முழுவதும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் குறித்து 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பிரமோற்சவத்தின் 3ம் நாளான இன்று மூஷிக வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.