விஷம் அருந்தி தந்தை, மகள் விபரீத முடிவு – தாய் கவலைக்கிடம்; மகன் இறந்ததுதான் காரணமா?

குற்றால தனியார் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் மதுரையை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்தநிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி நுழைவு வாசல் எதிரே தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் கடந்த 30-ம் தேதி இரவு, மதுரை மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (55,) தனது மனைவி காமாட்சி, மகள் தனபிரியா உடன் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் விடுதி உரிமையாளர் கதவை உடைத்து பார்த்துள்ளார்.
image
அப்போது கணவர் மகாலிங்கம், மகள் தனப்பிரியா கட்டிலில் இறந்து கிடந்த நிலையில், மனைவி காமாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றாலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், காமாட்சி மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தடவியியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இருவரின் உடலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னை தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மகாலிங்கம் மகனும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றாலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு வரும் நிலையில் தந்தை, மகள் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.