திண்டுக்கல்: “ஒட்டன்சத்திரம், பழநி தொகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரும் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்து வரும் அப்பகுதி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டபணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி தலைவர்களிடம் தங்கள் பகுதியில் தேவையான திட்டங்கள் குறித்து தனித்தனியாக கேட்டறியப்பட்டது. இதில் உள்ளாட்சி நிர்வாகங்களின் வருவாய், செலவினம் குறித்தும் கேட்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது: “காவிரி குடிநீர் திட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் முழுமை பெறவில்லை. விடுபட்டபகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வைகை அணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டங்களை நிறைவேற்றினால், எதிர்காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணப்படும். திண்டுக்கல் பேருந்துநிலையம் இடமாற்றம் குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், “திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் திட்டபணிகள், வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கித்தர வேண்டும். நல்ல மன்னர் ஆட்சியில் மாதம் மும்மாரி மழைபொழியும் என்பார்கள், தற்போது தமிழக முதல்வர் ஆட்சியில் மாதம் 30 நாட்களும் மழை பெய்கிறது. இதனால் இந்த ஆண்டு குடிநீர்பிரச்சினையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிக்க வரி விதிக்கப்படாத கட்டிடங்களுக்கு வரி விதிக்க வேண்டும். வரிவிதிக்கப்பட்ட கட்டிடங்கள் முறையான அளவில் உள்ளதா என சோதனை நடத்த வேண்டும். பேரூராட்சிகளுக்கு புதிய கட்டிடம் கட்ட ஒரே மாதிரி வரைபடம் திட்ட மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் நிலுவையில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
ஒட்டன்சத்திரம், பழநி தொகுதிகளுக்குட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் பெற கொண்டுவரப்பட்ட ஆழியாறு கூட்டுகுடிநீர் திட்டத்திற்கான அரசாணை ரூ.930 கோடிக்கு பெறப்பட்டுள்ளது. ஆழியாறு ஆற்றில் நீர் எடுக்க எதிர்ப்பு இருப்பதால் இதுகுறித்து விவசாயிகளிடம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் சுமுக முடிவு எடுக்கப்படும். இதற்கு மாற்றாக இந்த திட்டத்தை காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது” என்றார்.
கூட்டத்தில் மின்மயானம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடவசதிவேண்டும். மழைநீர் வடிகால்வசதிவேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மகாராஜன், சரவணக்குமார், கம்பம் என்.ராமகிருஷ்ணன், மேயர் இளமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.