கேப்டன் திரைப்படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கோவையில் நடைபெற்ற கேப்டன் பட ப்ரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு ஆர்யா பேசினார்.
டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன். இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது.கோவையில் இன்று நடைபெற்ற கேப்டன் பட ப்ரமோஷன் நிகழ்வில் நடிகர் ஆர்யா பங்குபெற்றார். அப்போது பேசிய அவர்,
“என்னுடைய ஸ்பெஷல் திரைப்படமாக ராஜா ராணி அமைந்தது. அப்படத்திற்கு தமிழக அரசு விருது அளித்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோன்று, வித்தியாசமான கதைக்களத்தில் கேப்டன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இராணுவம் பற்றிய கதைக் கருவைக் கொண்டது இப்படம். கேப்டன் திரைப்படம் ஹாலிவுட் படம் போன்று பிரமாண்டமானதாக வித்தியமாசான முறையில் உருவாகியுள்ளது . நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பொதுமக்கள் விரும்பி பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும்,.இப்படம் குறித்தான உங்கள் எதிர்பார்ப்பும் மகிழ்வளிக்கிறது. இப்படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வந்து காண வேண்டும் என்றார்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு பேரும் புகழும் கிடைப்பதில்லை ஆனால் நடிகர்களுக்கு கிடைக்கிறது எனப் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, இந்திய ராணுவ வீரர்கள் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணிக்கின்றனர். பெயர், புகழ் ஆகிய எதையும் அவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை “என்றார்.