கரூர்: எம்எஸ்எம்இ (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) மின் கட்டண உயர்வில் ரூ.3,217 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் இன்று (செப். 3) நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது, “கரூர் திருமாநிலையூரில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தில் 85 பேருந்துகள் நிறுத்த முடியும். புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்திலிருந்து தற்போதுள்ள பேருந்து நிலையம் 2.1 கி.மீட்டர், ரயில் நிலையம் 3.5 கி.மீட்டர், ஆட்சியர் அலுவலகம் 4.4 கி.மீட்டர், மாநகராட்சி அ லுவலகம் 1.6 மி.மீட்டர் என நகரின் மையப்பகுதியில் அமைத்துள்ளது.
தற்போதுள்ள பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்திலோ அல்லது நடந்தே கூட வந்துவிடும் தூரத்தில் தான் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் இயங்கும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் குளித்தலை ரா.மாணிக்கம், அரவக்குறிச்சி பி.ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, கரூர் மாநகர மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன் ஆகியோர் உரையாற்றினர். மண் டலக்குழுத் தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், அன்பரசன், ஆர்.எஸ்.ராஜா, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆணையர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநகர பொறியாளர் நக்கீரன் நன்றி கூறினார்.
முன்னதாக, கரூர் புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கருணைத் தொகையுடன் ஒதுக்கீடு மற்றும் பணி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது, “அனைவருக்கும் வீடு திட்டத்தில் மத்திய அரசு அதிக நிதி தருவதுப்போல கூறுகின்றனர். நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கொளந் தானூரில் ஏற்கனவே இருந்த அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டு தலா ரூ.10 லட்சத்தில் கட் டப்படும் 150 வீடுகளில் மாநில அரசு பங்கு ரூ.7 லட்சம், மத்திய அரசு பங்கு ரூ.1.5 லட்சம், பயனாளிகள் பங்களிப்பு ரூ.1.5 லட்சமாகும்” என்றார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது: “தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கடந்த இரு ஆண்டுகளில் தலா 7,500 வீடுகள் வீதம் இரு ஆண்டுகளில் 15,000 வீடுகளை இடித் துவிட்ட கட்ட அரசு ரூ.2,400 கோடி ஒதுக்கியுள்ளது. அந்த வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் வரை வசிப்பதற்காக ரூ.24,000 வழங்கப்படுகிறது” என்றார்.
அதனை தொடர்ந்து கரூர் பிரேம் மஹாலில் சிஐஐ சார்பில் நடந்த 13-வது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது: “குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் கட்டணத்தை குறைக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் ரூ.3,217 கோடி வரை மின் கட்டண உயர்வை அவர்களுக்கு குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்றார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, “நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 15 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. நாட்டின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 9.5 சதவீதமாகும். ஓசூர் உள்ளிட்ட 10 இடங்கள் ஏற்றுமதி மையமாக மேம்படுத்தப்படும் “என்றார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத் தவேண்டும் என தெரிவித்துள்ளனர். இடம் வழங்கினால், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்டித்தரப்படும். அதேபோல முருங்கை பூங்கா அமைத்து தரக்கோரியுள்ளனர். அதற்கும் இடம் வழங்கினால் முருங்கை தொழில்பூங்கா மற்றும் ஆய்வுக்கூடம் அமைத்து தரப்படும். நஞ்சைக்காளகுறிச்சி சிட்கோவில் ஜவுளி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இங்கு இதரத் தொழில்களும் தொடங்க அனுமதி கேட்டுள்ளனர். இது தொடர்பாக கலந்து பேசி ஒப்புதல் வழங்கப்படும். மின் பற்றாகுறை உள்ளதாக தெரிவித்துள்ளனர். துணை மின் நிலையம் அமைக்கப்படும்” என்றார்.