உதய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு பள்ளியில் தலித் சிறுமி வழங்கியதாக கூறி உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு சமையல்காரர் அறிவுறுத்திய வன்மமான செயல் நடந்துள்ளது.
ஜாதிகள் பார்க்கக்கூடாது. பிறப்பால் அனைவரும் சமம். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது என பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே ஜாதிய வன்ம சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இத்தகைய சம்பவங்களை இன்று வரை முற்றிலுமாக ஒழிக்க முடியாதது வருத்தமான ஒன்றாக தான் உள்ளது. இந்நிலையில் தான் ராஜஸ்தான் அரசு பள்ளியில் ஜாதிய வன்மத்துடன் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திடுக்கிட வைக்கும் இந்த சம்பவம் குறித்த விபரம் வருமாறு:
அரசு பள்ளியில் மதிய உணவு
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் பரோடியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். லாலாராம் குர்ஹார் என்பவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று பள்ளியில் வழக்கம்போல் உணவு சமைக்கப்பட்டது.
தலித் மாணவிகள் என குற்றச்சாட்டு
இந்த உணவு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. மாணவர்கள் உணவை சாப்பிட தொடங்கினர். இந்நிலையில் தான் மாணவர்களுக்கு 2 தலித் மாணவிகள் உணவு பரிமாறியதாக சமையல்காரர் லால் ராம் குர்ஜார் கூறினார். மேலும் சாப்பிட்டு கொண்டிருந்த மாணவர்களிடம் தலித்துகளால் பரிமாறப்பட்ட உணவை சாப்பிடக்கூடாது இந்த உணவை தூக்கி எறியுங்கள் என கூறியுள்ளார்.
உணவை வீசி எறிந்த மாணவர்கள்
இதையடுத்து மாணவர்கள் உணவை சாப்பிடாமல் தூக்கி வீசினர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சமையல்காரர் லால்ராம் குர்ஜாரை கண்டித்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்களிடம் கூறினர். ஆனால் அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
அதிரடி கைது
இதனால் அவர்கள் சம்பவம் குறித்து கோகுண்டா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமையல்காரர் லாலாராம் குர்ஜாரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜாதிய வன்மத்துடன் செயல்பாடு
அதாவது இந்த சமையல்காரர் மாணவர்களுக்கு உணவு பரிமாறாமல் இருப்பதோடு, மாணவர்களை வைத்து உணவு பரிமாற வைத்து வருவது தெரியவந்தது. மேலும், எப்போதும் உணவு பரிமாற உயர்ஜாதியை சேர்ந்த மாணவர்களை பயன்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் இந்த மாணவர்கள் சரியாக உணவை பரிமாறவில்லை. இதனால் நேற்று ஆசிரியர் ஒருவர் 2 மாணவிகளை வைத்து உணவு பரிமாறினார். இந்நிலையில் சிறுமிகள் தலித் எனக்கூறி கோபமடைந்த சமையல்காரர் உணவை தூக்கி வீசும்படி மாணவர்களிடம் கூறியது தெரியவந்தது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமையல்காரரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.