ஐதராபாத்: பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘பிரம்மாஸ்திரம்’ வரும் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரம்மாஸ்திரம் படத்தில் ரன்பீர் கபூர், ஆலியாபட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கரன் ஜோகர் பங்கேற்றார்.
பிரம்மாண்டமாக வெளியாகும் பிரம்மாஸ்திரம்
ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து, இப்போது உருவாகும் பெரும்பாலான படங்கள் பான் இந்தியா ஜானரில் 5 மொழிகளில் வெளியாகிறது. ஆனால், இதில் எல்லா படங்களும் வெற்றி பெறுகிறதா என்றால், அது இல்லை என்றுதான் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பிரம்மாஸ்திரம்’ பான் இந்தியா படமாக வரும் 9ம் தேதி வெளியாகிறது.
ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு தீவிரம்
அயன் முகர்ஜி இயக்கியுள்ள ‘பிரம்மாஸ்திரம்’ படத்தில், ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா என பலரும் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், சுமார் 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ள பிரம்மாஸ்திரம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரம்மாஸ்திரம் படக்குழுவினர் பங்கேற்றனர்.
இந்திய சினிமா குறித்து கரன் ஜோகர் கருத்து
ஐதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாஸ்திரம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோகர், டோலிவுட் இயக்குநர் ராஜமெளலி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது பேசிய கரன் ஜோகர், “இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நமது படங்களை கொண்டுபோக முயற்சித்து வருகிறோம். ராஜமெளலி சார் சொன்னது மாதிரி இது இந்திய சினிமா. இதனை டோலிவுட், பாலிவுட் என பிரிக்க வேண்டாம்” எனக் கூறினார்.
தேவையில்லாத ‘வுட்’ கள் இனி வேண்டாம்
தொடர்ந்து பேசிய அவர், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல ‘வுட்’ களை நாம் பிரித்து வைத்துள்ளோம். இனிமேல் இப்படி ஏதும் இல்லை, தெலுங்கு சினிமா, இந்தி சினிமா என பிரித்துப் பார்க்காமல் இந்திய சினிமா என்றே அடையாளப்படுத்துவோம். இந்திய சினிமாவில் ஒரு அங்கம் என்பதை நாம் பெருமையுடன் சொல்வோம்” எனக் கூறினார். கரன் ஜோகரின் இந்த கருத்து திரைத்துறையினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தி கிரே மேன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “என்ன தமிழ் நடிகர் என அழைக்க வேண்டாம். இந்திய நடிகர் என சொன்னால் போதும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.