வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் மோசடி குறித்த வழக்கில், பாலிவுட் நடிகை நோரா பதேஹியிடம், டில்லி போலீசார் விசாரணை
நடத்தினர்.
அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி லீனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் டில்லி திஹார் சிறையில் இருந்தபோது, உடன் இருந்த தொழில் அதிபருக்கு ஜாமின் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த வழக்கிலும் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இது குறித்து, டில்லி பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, பாலிவுட் நடிகையர் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்கு, சுகேஷ் சந்திரசேகர் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியது தெரிய வந்தது. இது குறித்து, ஜாக்குலின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு நடிகையான நோரா பதேஹியிடம், டில்லி போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் இன்றும் அந்த விசாரணை தொடர்ந்தது. சுகேஷ் சந்திரசேகர் விலை உயர்ந்த காரை நோரோ பதேஹிக்கு பரிசாக கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை பதேஹி மறுத்துள்ளார்.
இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக சேர்ப்பதா அல்லது சாட்சியாக சேர்ப்பதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement