மெமரி சிப்கள் கொண்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை நீக்கி, QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான யோசனை சட்ட வரைவு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பதிவுகள்
நாட்டில் ஏறக்குறைய ஐம்பத்தேழு இலட்சம் பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளனர்.
அவர்களின் அடையாளம் மற்றும் ஓட்டக்கூடிய வாகன வகைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் சாரதி அனுமதிப் பத்திர சிப்பைப் போன்ற நினைவக சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த அட்டைகள் ஒஸ்ரியாவில் இருந்து யூரோக்களில் பணம் செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டன.
பொருளாதார நெருக்கடி
ஆனால் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் திறைசேரியில் யூரோ இல்லாததால் இந்த அட்டைகளின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமல் உள்ளன.
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் அச்சடித்து அவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சிடப்பட்ட அட்டைகளை இறக்குமதி செய்ய அதிக செலவாகும் என்பதால், அதில் பாதிக்கும் குறைவான விலையில் சைபர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.