அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த ஆண்டு அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேரை, மனிதநேய அடிப்படையில் தமிழ்நாடு அரசு விடுதலை செய்திருந்தது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டை போன்று இந்தாண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
குறிப்பாக, ராஜீவ் கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களையும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் மனு விசாரணையின்போது, தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானமே இறுதியானது, ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தீர்ப்பின் வழிகாட்டுதலின் படி, எஞ்சிய நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திமுக ஆட்சிக்கு வந்தால், நீண்ட காலமாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களை விடுதலை செய்வோம் என்ற தேர்தல் பரப்புரை செய்த முதலமைச்சர், செப்டம்பர் 15 – அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையொட்டி நீண்ட காலமாக சிறையில் இருக்கும் 6 தமிழர்களையும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.