புதுச்சேரி: புதுச்சேரியில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.2,200 கோடி சிறப்பு மத்திய உதவி தேவை என்று 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (செப்.3) நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தென்மண்டல மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது: ‘‘புதுச்சேரி அரசு கடந்த கூட்டத்தில், தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசிடம் இருந்து நிலம் தேவைப்படுவது தொடர்பான பிரச்சினையை முன் வைத்தது. புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, தமிழகத்தில் உள்ள 395 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். நிலம் தேவையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
காரைக்கால் பகுதியில் இருந்து தமிழ்நாடு வழியாக புதுச்சேரிக்கு மணல் கொண்டு வருவது தொடர்பாக கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி மாநிலத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும். புதுச்சேரி பகுதியில் ஆற்று மணல் வளம் ஒரு பற்றாக்குறையாக உருவெடுத்துள்ளது. மணலின் தேவை நிரந்தரமானது. எனவே வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்வதற்கு வசதியாக புதுச்சேரி மணல் இறக்குமதி, போக்குவரத்து மற்றும் சேமிப்பு விதிகள் 2018-ஐ புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் காரைக்கால் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு இறக்குமதி செய்யப்படும் மணலை கொண்டு செல்ல முடியவில்லை. புதுச்சேரி அரசு தனது எல்லை வழியாக மணல் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு விதிக்கும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைபிடிக்கும்.
புதுச்சேரியின் மேற்பரப்பு நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ’’இந்திராவதி-கிருஷ்ணா-கோதாவரி-பெண்ணார்-காவிரி இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல்” என்பது அடுத்த நிரல். அனைத்து பங்குதாரர்களுக்கும் தற்போதைய மொத்த நீர் தேவை சுமார் 5.75 டிஎம்சியாக இருக்கிறது. 2040-ம் ஆண்டளவில் தேவை 7 டிஎம்சி வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலத்தடி நீர்நிலைகளில் இருந்து திட்டமிடப்பட்ட தேவையை பூர்த்தி செய்வது சாத்தியமற்றது. நிலத்தடி நீர் கிடைக்காததால், புதுச்சேரியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, வராகநதி மற்றும் தென்பெண்ணையாற்றின் குறுக்கிடும் நதிகளை கோதாவரி (ஈஞ்சம்பள்ளி)- காவிரி (கிராண்ட் அணைக்கட்டு) உடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை புதுச்சேரியைப் பொறுத்த வரையில் முக்கியத்துவம் பெறுகிறது. புதுச்சேரி அரசின் கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, நதிகளை இணைக்கும் திட்டம் ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆய்வு வரம்பிற்குள் சேர்க்க வேண்டும்.
நிதிப் பகிர்வு விவகாரத்தில் புதுச்சேரியின் முரண்பாடாக நடத்தப்படுகிறது. நிதி ஆயோக் பார்முலாவின் கீழ் நிதிப் பகிர்வுக்கான நோக்கத்துக்காக புதுச்சேரி மாநிலம் என்று கருதப்படுவதில்லை. ஆனால் மறுபுறம் புதுச்சேரி மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதிப் பகிர்வுக்கான மாநிலமாக கருதப்படுகிறது. அங்கு மாநிலங்களுக்கு இணையாக 60:40 விகிதத்தில் நிதி வழங்கப்படுகிறது. எனவே, சிஎஸ்எஸ் திட்டங்களின் கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக கருதப்பட்டு, மத்திய அரசு வழங்கும் திட்டங்களுக்கு 100 சதவீதம் நிதியுதவி வழங்கலாம்.
புதுச்சேரிக்கான சாதாரண மத்திய உதவி பணவீக்கக் குறியீட்டிற்கு ஏற்ப வழங்கப்படவில்லை. இதனால், 2018-19 -ல் 3 முதல் 4 சதவீதமாகவும், 2020-21 -ல் 10 சதவீதமாகவும் இருந்த பெயரளவிலான வளர்ச்சி, 2022-23-ல் எதிர்மறை எண்ணிக்கையாக (-) 8 சதவீதமாகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டது நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது. இது 2022-23 நிதியாண்டில் பெரும் வருவாய் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. ஒரு லட்சம் கோடி செலவில், ‘மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான நிதி உதவி’ என்ற மிகவும் பயனுள்ள திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதை புதுச்சேரி மாநிலம் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறது.
இருப்பினும் யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. எனவே, பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் புதுச்சேரி தடைபட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம், துறைமுக இணைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தல், புதிய சட்டசபை வளாகம் போன்ற எங்களின் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்ற ரூ. 2,200 கோடி சிறப்பு மத்திய உதவி தேவை.’’ இவ்வாறு ஆளுநர் தழிமிசை தெரிவித்தார்.