பலரும் ஒரு பாடத்தை கற்கவே, முட்டி மோதி சிரமப்படுவதுண்டு. ஆனால் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ரெஹனா ஷாஜஹான் (Rehna Shajahan), ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகள் முடித்து, சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) என்ற மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் எம். காம் நுழைவுத் தேர்வில், 0.5 மதிப்பெண் குறைவாக பெற்றதால், அவருக்கு பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சற்றும் மனம் தளராமல், தொலைதூரக் கல்வியில் இரண்டு முதுகலை பயிற்சிகளை ஒரே நேரத்தில் முடித்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பிறகு ஜாமியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பை முடித்துள்ளார்.
மேலும் கோவிட் தொற்று சமயத்தில் ஒரே நாளில் சுமார் 55 ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளார். ஒரே நாளில் இவ்வளவு ஆன்லைன் படிப்புகளை முடித்தது குறித்து, தான் முன்பு பணியாற்றிய டெல்லியைச் சேர்ந்த மகளிர் என்.ஜி.ஓ-வின் இயக்குநர் டாக்டர் ஷர்னாஸ் முத்துவிடம் பகிர்ந்துள்ளார். இதைக் கேட்ட அவர், ’நீங்கள் ஏன் உலக சாதனைக்கு முயற்சி செய்து பார்க்கக் கூடாது?’ எனக் கூறி போட்டியில் பங்குகொள்ள உற்சாகப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் நிதி சார்ந்த ஆன்லைன் படிப்புகளை பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுத்து, ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகளை முடித்து சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். `என்னுடைய குடும்பம் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது’ என நெகிழ்ந்து பேசி உள்ளார், ரெஹனா.