ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், நாளை (செப். 5) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன.
இத்தனை மாதங்களாகக் கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லாமல் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு திடீரென அங்கு திடீரென சிக்கல் ஏற்பட்டது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் முதல்வராக உள்ள ஹேமந்த் சோரனுக்கும் சுரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. அரசு பொறுப்பில் இருக்கும் ஒருவருக்குச் சுரங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று பாஜக அளித்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரன் சட்டசபை உறுப்பினர் பதவியைப் பறிக்க ஜார்க்கண்ட் ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார்.
அரசியல் குழப்பம்
இதையடுத்து ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் சூழல் உருவானது. இதனால் அவரது முதல்வர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டது. ஹேமந்த் சோரன் எம்எல்ஏவாக தகுதி நீக்கம் செய்யப்படுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், அப்படி எதாவது நடந்தால், எம்எல்ஏக்கள் கட்சி மாறாமல் இருக்க அவர்களை ரிசார்ட்டிஸ் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
சில வாரமாகவே ஜார்கண்டில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் நாளை (செப். 5) அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டசபை செயலகத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர முதல்வர் ஹேமந்த் சோரன் விருப்பம் கூறப்பட்டு உள்ளது.
என்ன காரணம்
இதுகுறித்து அம்மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கூறுகையில், “ஜார்கண்ட் மாநிலத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. எங்கள் பிரதிநிதிகள் ஆளுநரை [வியாழன் அன்று] சந்தித்தனர். அப்போது அவர் ஓரிரு நாட்களில் சில முக்கிய முடிவுகளை அறிவிப்பதாக உறுதியளித்தார். ஆனால் இது வரை எதுவும் நடக்கவில்லை. எனவே, சட்டசபையில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
பாஜக
அதேபோல மறுபுறம் பாஜகவும் தனியாகத் தனது எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. நம்பிக்கை வாக்கெடுப்பினும் போது, ஆளும் தரப்பிற்கு அழுத்தம் கொடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.