ஏழுமலையான் பிரம்மோற்ஸவம் : தேவஸ்தானம் விரிவான ஏற்பாடு| Dinamalar

திருப்பதி :திருமலை ஏழுமலையான்பிரம்மோற்ஸவத்தின் போது நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள் குறித்த அறிக்கையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.கலியுக தெய்வமான ஏழுமலையான் உள்ள திருமலை புனித சேத்திரத்தில் ஒவ்வொரு நாளும் திருவிழா நடந்து வருகிறது.

ஆனால் அனைத்து திருவிழாக்களிலும் பிரம்மோற்ஸவம் அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு மிகவும் பிடித்தமான உற்ஸவமாகும்.இந்த பிரம்மோற்ஸவத்தை செப்.27 முதல் அக்டோபர் 5 வரை பிரமாண்டமாக நடத்த தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.

ஒன்பது நாட்களுக்கு நடக்கும் இந்த திருவிழாவில் ஏழுமலையானின் உற்ஸவமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ மலையப்ப சுவாமி 16 வகையான வாகனங்களில் (இரண்டு ரதங்கள் உட்பட) மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.பிரம்மோற்ஸவத்தின் போது நடக்கும் முக்கிய நிகழ்வுகள்:

கோயில் துாய்மை

பிரம்மோற்ஸவம் தொடங்குவதற்கு முன் கோயில் வைகானச ஆகமப்படி தூய்மை படுத்தப்படுகிறது.

அங்குரார்பணம்

பிரம்மோற்ஸவம் துவங்கும் முன் புற்று மண்ணை சேகரித்து பூமாதேவிக்கு சிறப்பு பூஜை செய்து இந்த மண்ணில் ஒன்பது வகையான தானியங்கள் விதைக்கப்படுகின்றன. தானியங்கள் முளைக்கும் வரை நீர் தெளிக்கப்படும். இதை அங்குரார்பணம் என்று அழைக்கின்றனர்.

கொடியேற்றம்

ஏழுமலையான் கோயிலின் கொடிமரத்தில் கருடன்படத்தை ஏற்றி கோயிலுக்குள் உற்ஸவமூர்த்திகள் உலா வருவது வழக்கம். இதையடுத்து ஏழுமலையானுக்கு மிகவும் விருப்பமான நண்பரான கருடன், பிரம்மா, இந்திரன், யமன், அக்னி, குபேரன், வாயு போன்ற தெய்வங்களை மட்டுமின்றி வசிஷ்டர், விஸ்வாமித்திரர் உள்ளிட்ட சப்தரிஷிகள் மற்றும் விநாயகருடன் பிற தெய்வங்களையும் அழைப்பர். இதற்கு தேவதாவாஹனம் என்றும் பெயர் உண்டு

வாகன சேவைகள்

ஏழுமலையான் பிரம்மோற்ஸவத்திற்கு பல்வேறு வாகன சேவைகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றன. உற்ஸவமூர்த்தியாக விளங்கும் மலையப்பசுவாமி பெரியசேஷ, சின்னசேஷ அன்னபறவை, சிம்மம், முத்துபந்தல், கல்பவிருட்சம், சர்வபூபாலம், கருடன், அனுமந்தன், யானை, சூர்யபிரபை, சந்திரபிரபை, குதிரை உள்ளிட்ட 13 வாகனங்களில் திருமாட வீதிகளில் எழுந்தருளிஅருள்பாலிக்கிறார். மோகினி அவதாரம், தங்கதேர் மற்றும் திருத்தேர் உள்ளிட்டவையும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாகனமும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அற்புதமான செய்தியை தெரிவிக்கிறது.

கொலு

ஏழுமலையான் கோயிலுக்குள் பிரம்மோற்ஸவத்தின் வாகனச் சேவையின்போது கொலு வைப்பது வழக்கம். இந்த நேரத்தில் கோயில் அர்ச்சகர்கள் இறைவனுக்கு நைவேத்தியம் சமர்பிக்கின்றனர்.

ஸ்நபனம்

பிரம்மோற்ஸவத்தின் போது காலையில் ஒரு வாகன சேவையும் இரவில்மற்றொரு வாகன சேவையும் நடத்தப்படுவது வழக்கம். அதனால் ஏற்படும் அசதியை போக்க மலையப்பஸ்வாமிக்கு இரண்டு வாகனச் சேவைகளுக்கு இடையே சிறப்பு வாசனை திரவிய அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதனால் இறைவன் இரவில் மீண்டும் புது உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வாகனம் ஏறத் தயாராகிறார்.

சூர்ணாபிஷேகம்

சூர்ணாபிஷேகம் என்பது பிரம்மோற்ஸவத்தின் கடைசி நாளன்று காலையில் ஏழுமலையானுக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி உள்ளிட்ட உற்ஸவமூர்த்திகளுக்கு துாபமிட்டு செய்யப்படும் திருமஞ்சனம் ஆகும்.

தீர்த்தவாரி

பிரம்மோற்ஸவத்தின் கடைசி நாளில் திருமலையில் உள்ள திருக்குளத்தில் ஏழுமலையானின் கையில் உள்ள சுதர்சன சக்கரத்திற்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு பின் திருக்குளத்தில்தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.

தேவோதோத்வசனம்

கடைசி நாளில் இறைவனுக்கு அர்ச்சனை செய்து நவாஹ்னிகா பிரம்மோற்ஸவத்தில் பங்கேற்ற முப்பெரும் தெய்வங்கள் மற்றும் முனிவர்களிடம் ஏழுமலையானிடம் பிரியாவிடை பெறுகிறார். இதேபோல் ஏழுமலையான் பிரம்மோற்சங்களை உரிய பாசுரங்களுடன் நடத்திய பிரம்மதேவனுக்கும் அர்ச்சகர்கள் தங்கள் நன்றியை இதன் வாயிலாக தெரிவிக்கின்றனர்.

கொடியிறக்கம்

பிரம்மோற்ஸவத்தின் இறுதி நிகழ்ச்சியாக கொடியிறக்கம் நடைபெறுகிறது. ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்ஸவம் தொடங்குவதற்கு அடையாளமாக முதல் நாளன்று கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி கடைசி நாள் மாலை கொடிமரத்தில்
இருந்து இறக்கப்படும். இதையடுத்து பிரம்மோற்ஸவம் பிரமாண்டமாக நிறைவடைகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.