வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ-சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மைக்கேல் கார்பசேவின் இறுதிச் சடங்குகளில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அதே நேரத்தில் அவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை அறிவிக்காததுடன், இறுதிச் சடங்கையும் புறக்கணித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.
முன்னாள் சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மைக்கேல் கார்பசேவ், 91, சமீபத்தில் உயிரிழந்தார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் நோவோடெவிசியில் உள்ள அவருடைய மனைவியின் கல்லறைக்கு அருகே, கார்பசேவின் உடலடக்கம் நேற்று நடந்தது.முன்னதாக, பில்லர் ஹாலில் இறுதிச் சடங்குகள் நடந்தன. வழக்கமாக ரஷ்யாவின் அதிபர் உள்ளிட்ட தலைவர்களின் இறுதிச் சடங்கு இங்கு நடக்கும். பலத்த பாதுகாப்புடன் கார்பசேவின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது.
இதில், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.அதே நேரத்தில், அரசு தரப்பில் மரியாதை அறிவிக்கப்படவில்லை. இறுதிச் சடங்கில் அதிபர் விளாடிமிர் புடினும் பங்கேற்கவில்லை. முன்னதாக கார்பசேவ் உயிரிழந்த அன்று, மருத்துவமனையில் அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்தபோது, புடின் சார்பில் மலர்வளையம் வைக்கப்பட்டது.
சோவியத் யூனியனின் தலைவராக, 1985 – 1991 வரை இருந்தவர் கார்பசேவ். அப்போது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தார். அதேபோல், சோவியத் யூனியனில் பல சீர்திருத்தங்களையும் அவர் மேற்கொண்டார். இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் மிகச் சிறந்த சீர்திருத்தவாதியாக அவர் போற்றப்படுகிறார். அதே நேரத்தில் சோவியத் யூனியன், 1991ல் பிரிந்ததற்கு காரணமாக அமைந்ததால், ரஷ்யாவில் அவர் விமர்சிக்கப்படுகிறார்.
சோவியத் யூனியன் பிரிந்ததால், ரஷ்யாவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு, பலர் வறுமைக்கு தள்ளப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.அதனால், கார்பசேவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அரசு மரியாதை அறிவிக்கப்பட்டால், பல வெளிநாட்டுத் தலைவர்களையும் அழைக்க வேண்டியிருக்கும்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளன. இந்நிலையில், வெளிநாட்டுத் தலைவர்களை அழைப்பதை தவிர்க்க, அரசு மரியாதை தருவதற்கு ரஷ்ய அதிபர் புடின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement