குற்றாலம் விடுதியில் விஷம் குடித்து தந்தை, மகள் தற்கொலை; தாய்க்கு தீவிர சிகிச்சை: மதுரையை சேர்ந்தவர்கள்

தென்காசி: குற்றாலம் விடுதியில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷமருந்தியதில் தந்தை, மகள் பலியாகினர். தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தென்காசி மாவட்டம், குற்றாலம் அண்ணா சிலை அருகில் உள்ள தனியார் விடுதியில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குடும்பத்தினர் கடந்த 30ம் தேதி வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர். அவ்வப்போது அருவிக்குச் சென்று குளித்துவிட்டு குற்றாலத்தில் பல இடங்களுக்கு சென்று விட்டு வந்தவர்கள், நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளனர்.

நேற்று காலை அறையில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள் கதவைத் தட்டி சத்தம் கொடுத்துள்ளனர். ஆனால் கதவு திறந்தே கிடந்ததாக கூறப்படுகிறது. உள்ளே சென்று பார்த்த போது மூவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். இதில் 57 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆகிய இருவரும் இறந்துவிட்ட நிலையில் 52 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.  அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் மதுரை திருநகரை சேர்ந்த பாண்டியன் மகன் மகாலிங்கம் (57), அவரது மனைவி காமாட்சி (52), மகள் தனபிரியா (30) என்பது தெரிய வந்தது. மூவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளனர். சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகளும் சோதனை நடத்தினர். மகாலிங்கம் மற்றும் அவரது மகள் தனபிரியா ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூவரும் என்ன காரணத்திற்காக விஷம் குடித்தனர் என்ற விபரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.