புதுடெல்லி: கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோயை கட்டுப்படுத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ஐசிஏஆர்) தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ஒடிசாவில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் பரவுவது முதல்முறையாக கண்டறியப்பட்டது. கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் கால்நடைகளிடையே இந்த நோய் அதிவேகமாக பரவி வருகிறது.
தோல் கழலை நோய் பசுக்களை அதிகம் பாதிக்கிறது. இதன்காரணமாக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு பால் உற்பத்தி குறைந்துள்ளது. தயிர், நெய் உற்பத்தி 10 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. இதேநிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் பால் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக (ஐசிஏஆர்) துணை இயக்குநர் பூபேந்திர நாத் திரிபாதி கூறியதாவது:
ஐசிஏஆர் அமைப்பின் ஹிசார் மையம், உத்தர பிரதேசத்தின் இசாத் நகரில் செயல்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகம் இணைந்து தோல் கழலை நோய்க்கு புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இந்த தடுப்பூசிக்கு “லம்பி புரோ லேக்இன்ட்” என்று பெயரிடப்பட்டு உள்ளது.
தற்போது கோட் பாக்ஸ், ஷிப் பாக்ஸ் ஆகிய தடுப்பூசிகளை கால்நடைகளுக்கு செலுத்தி வருகிறோம். இந்த தடுப்பூசிகள் 60 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கிறது. உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தடுப்பூசி 100 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கும். இந்த தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவை சேர்ந்த முன்னணி கால்நடை மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து புதிய தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது.