எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், 50 தொகுதிகளில் கூட, பாஜக வெற்றி பெறாது என, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், கடந்த 8 ஆண்டுகளாக, ஆட்சி அதிகாரத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்து அதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.
தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அண்மையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய, ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் ஆகியோர் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதனால், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போதே களை கட்டி விட்டது என சொல்லலாம். எனினும், எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து நிலவாதது, ஆளும் பாஜகவுக்கு நல்வாய்ப்பாக உள்ளது. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பல தரப்பட்ட கருத்துக்கள் உலா வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியதாவது:
அடுத்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 50-ஐ கூட தாண்டாது. தேர்தல் ஆதாயங்களுக்காக நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கும்.
அவர்களின் மோசமான திட்டத்தை முறியடிக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. தங்கள் (ஐக்கிய ஜனதா தளம்) ஓட்டு வங்கி நிலையாக இருக்கிறது. பாஜகவின் சதியால் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு குறைவான இடங்கள் கிடைத்தது.
இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில், எதிர்க்கட்சித் தலைவர்களை நாளை சந்தித்து பேச, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.