செந்தில் பாலாஜிக்கு வந்த புது சிக்கல்.. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். அவரை ட்விட்டர் பக்கத்தில் 2.21 லட்சம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். பேஸ்புக் பக்கத்தில் 1.45 லட்சம் பின்தொடர்ந்து வருகின்றனர்.

தமிழக அமைச்சரவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும், சுறுசுறுப்புடனும் செயல்படும் செந்தில் பாலாஜி தான் அண்மை காலங்களில் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் கோவையில் இவர் செய்த மாயாஜாலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படி இருக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் டிவிட்டர் கணக்கை நள்ளிரவில் ஹேக் செய்த அடையாளம் தெரியாத நபர்கள், அதில் கிரிப்டோ கரன்சி குழு ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதாகவும் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

டிவிட்டர் அக்கவுண்டின் பெயரை ‘Variorius’ என பெயர் மாற்றம் செய்துள்ளதோடு அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் புகைப்படத்துடன் “அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தனது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு அதில் நிதியுதவி கோரி பதிவிடப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.