ஏலகிரி: ஏலகிரி மலையில் ஹோட்டல்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன மீன்கள், சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பொருள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி 2 ஆயிரம் அபராதம் விதித்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலை பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை அருகில் உயர்ந்த மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சாகச விளையாட்டுகள், சுவாமிமலை, ஜலகாம்பாறை, மற்றும் பர்ட்ஸ் பார்க் போன்ற அதிக முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளதால் சுற்றுலா பயணிகளை கவர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், இங்கு தரமான உணவுகள் கிடைப்பதில்லை என்றும், அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்றும் விலைக்கேற்ற உணவுகள் கிடைப்பதில்லை.
பதப்படுத்தப்பட்ட மற்றும் கலப்பட உணவுகளை வழங்கப்படுகிறது என்றும், கடந்த மாதம் 28-ம் தேதி அன்று தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வந்துள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா அறிவுரைப்படியும், வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். வி.செந்தில்குமார் வழிகாட்டுதலின்படியும், ஜோலார்பேட்டையின், நாட்றம்பள்ளி பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.பழனிசாமி ஏலகிரி மலை 13 ஹோட்டல்களில் அதிரடி ஆய்வு செய்தார். இதில் 3 கிலோ அளவில் பழைய சிக்கன், அதிக வண்ணம் சேர்க்கப்பட்ட 3 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. படகு இல்ல சாலையில் மீன் கடையில் அதிக வண்ணம் பூசப்பட்ட மீன் ஒரு கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் ஒரு ஹோட்டல்களில் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு 2000 அபராதம் விதித்தனர். மேற்படி உணவு பாதுகாப்புச் சட்டம் 2006 ன் படி பிரிவு 55ன் கீழ், சில கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டுள்ளது
ஆம்பூர்: ஆம்பூரில் எம்சி ரோட்டில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில் குமார், ஆம்பூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு உணவகத்தில் காலாவதியான சிக்கன் மற்றும் அதிக நிறமி கொண்ட சிக்கன் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு இருந்த இரு நாட்களான பழைய பரோட்டா பறிமுதல் செய்தனர். அந்த உணவகங்களில் பார்சல் செய்ய வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். அதே பகுதியில் இதே போல் செயல்பட்ட மேலும் நான்கு கடைகளில் சோதனை நடத்தப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸை உணவு பாதுகாப்பு துறையினர் வழங்கினர்.