”தேர்தல் பயத்தில் ஓட்டுக்காக முதலமைச்சர் வேல் ஏந்தினார்,” என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருப்பூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் நலனை கருத்தில் கொண்டு, 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பணிகள் நடந்து வரும் நிலையில், இது தொழிலாளர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழக முதல்வர் அனைவருக்கும் சொந்தமானவர். தி.மு.க., தலைவராக அவர் எப்படி வேண்டுமானால் இருந்து கொள்ளலாம்.
மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை பரிமாறுகிறார். ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாததை பற்றி, முதல்வரிடம் மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தேர்தலுக்கு முன்பு, வெற்றிவேல் யாத்திரை எனது தலைமையில் நடந்தது. ஆனால், ஸ்டாலின் தேர்தல் பயத்தில் வேலை ஏந்தி வெளியில் வந்தார்.
ஓட்டுக்காக அன்றைக்கு செய்து விட்டு, இன்றைக்கு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்ற வேண்டும். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட்டுக்கு ‘திருப்பூர் குமரன்’ பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். ராகுல் நடைபயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு பரந்து விரிந்துள்ளது. அதை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.