புதுடெல்லி: டெல்லியில் விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரை புதுப்பிக்கப்பட்ட மத்திய விஸ்தா முதல் திட்ட பகுதியை (சென்ட்ரல் விஸ்தா அவென்யூ) பிரதமர் மோடி 8-ம் தேதி திறந்து வைக்கிறார்.
டெல்லி ரைசினா ஹில் அருகே, மத்திய அரசின் நிர்வாக பகுதி அமைந்துள்ளது. இது மத்திய விஸ்தா என அழைக்கப்படுகிறது. இங்குதான், ராஜபாதை, ராஷ்ட்டிரபதி பவன், இந்தியா கேட், மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த் மற்றும் சவுத் பிளாக் பகுதிகள், புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஆகியவை உள்ளன. இந்த மத்திய விஸ்தா பகுதியை ரூ.13,450 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில் இதுவரை ரூ.1,339 கோடி செலவில் 2 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதில் விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான முதல் திட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இங்கு 1.1 லட்சம் சதுர மீட்டர் அளவுள்ள மண் நடைபாதைகளில் சிவப்பு கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதைச் சுற்றி பசுமையான புல்வெளிகள் காணப்படுகின்றன. இந்த ‘மத்திய விஸ்தா அவென்யூ’ என்ற முதல் திட்டத்தை 8-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்.