ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயது பெண் யானைக் குட்டி கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமாலியதா என்று பெயர் சூட்டப்பட்டு கோயில் மண்டபத்தில் வைத்து வளர்க்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் இருந்தபோது இந்த யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து, பாகன்கள் இருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதையடுத்து, புதிய பாகன்கள் இருவர் நியமிக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.10 லட்சம் செலவில் யானைக்காக கிருஷ்ணன்கோயில் தனியார் மண்டபத்தில், நவீன வசதிகளுடன் பெரிய மின்விசிறி மற்றும் குளிப்பதற்கு ஷவர்கள் அமைக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த யானை தாக்கப்படுவதாக மீண்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. யானையை தாக்குவது தெரிந்தாலும், யார் தாக்கினர் என்ற விவரம் தெளிவாக பதிவாகவில்லை. தொலைவில் இருந்து யாரோ மொபைலில் இந்த சம்பவத்தை பதிவு செய்து வைரலாக்கி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு வந்த அசாம் மாநில அதிகாரிகள் யானையை நேற்று ஆய்வு செய்தனர். மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத் துணை இயக்குநர் திலீப்குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள் யானையை பரிசோதித்து ஆய்வு செய்தனர்.
இவர்களுடன் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜ் மற்றும் கோயில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.