ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சமையல்காரர் ஒருவர் இரண்டு பட்டியலின சிறுமிகள் பள்ளியில் பறிமாறிய மதிய உணவை தூக்கி வீசுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
அரசுப் பள்ளியில் சமையல்காரராக பணியாற்றி வரும் லாலா ராம் குஜார் என்பவர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்திருக்கிறார்.
அந்த மதிய உணவை அங்கிருந்த பட்டியலின சிறுமிகள் மாணவர்களுக்கு பரிமாறியதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு கோபமடைந்த லால் ராம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்ற மாணவர்களிடம், `உணவை தூக்கி வீசி விடுங்கள்!’ என்றும் கூறியிருக்கிறார்.
இவருடைய பேச்சைக் கேட்டு அங்கிருந்த மாணவர்களும் உணவை வீசி இருக்கின்றனர். இந்த நிகழ்வு இரண்டு பட்டியலின சிறுமிகளையும் மனதளவில் பாதித்திருக்கிறது. இது தொடர்பாக சிறுமிகள் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, சிறுமிகளின் குடும்பத்தினர் ஒன்றிணைந்து பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் அந்த சமையல்காரர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள். அதன்பேரில், பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த சமையல்காரர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ராஜஸ்தான் பள்ளிகளில் தொடர்ச்சியாக இது மாதிரியான சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.