ஶ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலவர் குலாம் நபி ஆசாத், இன்று ஶ்ரீநகரில் தமது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி பலத்தை காண்பிக்க உள்ளார். ஶ்ரீநகரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை குலாம் நபி ஆசாத் வெளியிட உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களின் வேண்டுகோள். மொத்தம் 23 தலைவர்கள், காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர். இதனால் இந்த 23 தலைவர்களும் ஜி 23 தலைவர்கள் என அழைக்கப்பட்டு வந்தனர்.
காங்கிரஸின் ஜி23 தலைவர்களில் முதன்மையானவர் குலாம் நபி ஆசாத். ஆனால் காங்கிரஸ் மேலிடம் இப்படியான கலகக் குரலை விரும்பவில்லை. இதனால் குலாம் நபி ஆசாத்தை கட்சியில் இருந்து ஓரம் கட்டியது. குலாம் நபி ஆசாத்துக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்படவும் இல்லை.
குலாம் நபி ஆசாத் விலகல்
அதேநேரத்தில் குலாம் நபி ஆசாத் பாஜகவுடன் மிக நெருக்கமானவராகவும் வலம் வந்தார். இது காங்கிரஸ் தலைவர்களை கடும் அதிருப்தி அடையவு, வைத்தது. இந்த நிலையில் காங்கிரஸில் இருந்து தாம் வெளியேறுவதாக அறிவித்தார் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியின் பேரழிவுக்கு காரணமே ராகுல் காந்திதான் எனவும் குலாம் நபி ஆசாத் சாடினார்.
காஷ்மீர் காங்கிரஸ் கூண்டோடு மாயம்
இதனைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகினர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விட்டது எனலாம். ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி, இப்போது குலாம் நபி ஆசாத் வசமாகிவிட்டது.
குலாம் நபி ஆசாத் புதிய கட்சி அறிவிப்பு
இந்த நிலையில் இன்று ஶ்ரீநகர் வருகை தரும் குலாம் நபி ஆசாத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு தருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதன்பின்னர் சுமார் 20,000 பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் குலாம் நபி ஆசாத் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், சிறப்புரையாற்ற உள்ளார். அத்துடன் தமது புதிய கட்சி குறித்த அறிவிப்பையும் குலாம் நபி ஆசாத் வெளியிட உள்ளார்.
மாநில கட்சிகளுக்கு நெருக்கடி
குலாம் நபி ஆசாத் தமது கட்சியை ஜம்மு காஷ்மீரை மையமாக வைத்துதான் தொடங்குகிறார். ஆனால் சரத் பவார் பாணியில், தேசிய கட்சியாகவும் அது செயல்படும். ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுடன் இணைந்து குலாம் நபி ஆசாத் கட்சி தேர்தலை எதிர்கொள்ள சாத்தியம் உள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநில கட்சிகளுக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.