ஜார்கண்ட்: ஜார்கண்ட் அரசியலில் நிலவும் உச்சகட்ட குழப்பங்களுக்கு மத்தியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையால் அம்மாநில ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் மீது ஆளுநர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார். இதனால் மகாராஷ்டிரா ஆளும் ஜார்கண்ட் எம்எல்ஏக்களுக்கு பாஜக வலைவிரித்துள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கர் மாநிலம் கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதால் ஜாட்ர்கண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி நீடித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் சட்டசபையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஹேமந்த் சோரன் முடிவெடுத்துள்ளார்.
அதன்படி தானே முன்வந்து நாளை நம்பிக்கை தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளார். இதற்காக நாளை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.