எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் கல்வி நிலையங்களை தயார் செய்ய வேண்டும் – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தின் 60-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:

கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐஐடி கல்வி நிறுவனங்கள் உலகுக்கு நிரூபித்துள்ளன. ஐஐடிகளின் வரலாறு சுதந்திர இந்தியாவின் வரலாறாக அமைந்துள்ளது. உலக அரங்கில் இந்தியா உயர்ந்த நிலையை எட்ட ஐஐடி கல்வி நிறுவனங்கள் பெரும் பங்காற்றி உள்ளன.

உலகம் முழுவதும் டிஜிட்டல் புரட்சி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி ஐஐடி மற்றும் நாட்டின் இதர ஐஐடிகளில் கல்வி பயின்றவர்கள் முன்வரிசையில் உள்ளனர். ஐஐடிகளின் பலன்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டி சென்றுள்ளது. கல்வி, தொழில், சமூகம், இதழியல், இலக்கியம், அரசியல் என அனைத்து துறைகளிலும் ஐஐடி மாணவர்கள் சாதனை படித்து வருகின்றனர்.

சமூக நலனில் டெல்லி ஐஐடி அதிக அக்கறை கொண்டிருக்கிறது. கரோனா பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த ஐஐடி பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியது. பரிசோதனை கருவிகள், பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசம், குறைந்த விலை வென்டிலேட்டர்களை உருவாக்கியது. அந்த வகையில் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் டெல்லி ஐஐடி முக்கிய பங்காற்றியது.

வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது 4-வது தொழில் புரட்சியின் காரணமாக மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றியிருக்கும். எனவே எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் கல்வி நிறுவனங்களை இப்போதே தயார் செய்வது அவசியம். எதிர்கால சவால்களை இந்திய ஐஐடி கல்வி நிறுவனங்கள் மிக எளிதாக எதிர்கொள்ளும் என்று நம்புகிறேன். பருவநிலை மாறுபாடு உலகின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வு காண சுற்றுச்சுழலை பாதுகாக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.

வளரும் நாடான இந்தியாவின் மக்கள் தொகை மிக அதிகம். நமது எரிபொருள் தேவை அதிகம். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறும்போது பல்வேறு சவால்கள் எழக்கூடும். எனினும் இந்திய பொறியாளர்கள், விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் சவால்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.