பரமக்குடி அருகே சேதமடைந்த கால்வாயை பொதுப்பணித் துறையினர் சரி செய்யாததால் விவசாயிகளே களம் இறங்கி சீரமைத்தனர்.
வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மதுரை பகுதிகளில் பெய்த மழைநீர் சேர்ந்து கடந்த 3 நாட்களாக பார்த்திபனூர் மதகு அணைக்கு 4,500 கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதனால் பல்வேறு கால்வாய்கள், வைகையாறு மூலம் ராமநாதபுரம் மாவட்டம் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் பரமக்குடி அருகே கமுதக்குடி கண்மாய்க்கு வலது பிரதானக் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இலந்தைகுளம் என்ற இடத்தில் கால்வாயின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருகில் உள்ள கூத்தான் கால்வாயில் செல்கிறது.
இதனால் கமுதக்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்வது குறைந்துவிட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் 2 நாட்களாக கால்வாய் உடைப்பை சரி செய்யவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதைத் தொடர்ந்து கமுதக்குடி விவசாயிகள் நேரடியாக களம் இறங்கி கால்வாய் உடைப்பை சரி செய்தனர். கழுத்தளவு சென்ற தண்ணீரில் இறங்கி விவசாயிகள் கால்வாயில் உள்ள புதர் செடிகளை அகற்றினர்.