கேரளாவின் திருவனந்தபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய தெற்கு யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்துகொண்டனர். அமித் ஷா தொடங்கி வைத்த இந்தக் கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுகளுக்கிடையே உள்ள நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து கூட்டத்துக்குப் பின்னர் பா.ஜ.க நடத்திய மாநாட்டில் அமித் ஷா கலந்துகொண்டார்.
அப்போது மாநாட்டில் பேசிய அமித் ஷா, “காங்கிரஸ் இந்த நாட்டைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. மேலும் இந்த உலகமும், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக ஒருபோதும் உழைத்ததில்லை. அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே அவர்கள் பார்த்தனர். எனவே கேரளாவுக்கு எதிர்காலம் என்று ஒன்று இருக்குமானால் அது பா.ஜ.க மட்டும்தான்” எனக் கூறி காங்கிரஸையும், கம்யூனிஸ்ட்டையும் ஒருசேர விமர்சித்தார்.