குன்னம்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 3 தினங்களாக மின்சாரம் தடைப்பட்டாதல் வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நின்று போனதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது வேப்பூர் ஒன்றிய பகுதியாகும். வேப்பூர் கிராமத்தின் மையப் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கிராம பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெறும் நிலையில் நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் நகை கடன், விவசாய கடன் உள்ளிட்ட கடன் பெறுவதற்காகவும், தங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்காகவும், தங்களுக்கு தேவையான பணத்தினை எடுப்பதற்காகவும் வந்து செல்கின்றனர்.
இது மிகவும் பின்தங்கிய அதே நேரத்தில் படிப்பறிவு இல்லாத கிராம விவசாய பொதுமக்கள் வசிக்கும் பகுதி என்பதால் பெரும்பாலானவர்களுக்கு ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்கத் தெரியாது. எனவே இவர்கள் நேரடியாக வங்கிக்கு வந்து தங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதையும் பணத்தை பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இருப்பினும் ஏடிஎம் இயந்திரமும் இயங்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையின் பொழுது பலத்த இடி மற்றும் மின்னல் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வங்கியின் அருகே இருந்த மின்மாற்றி பழுதாகி விட்டது. இதனால் வங்கிக்கு மின்சாரம் நின்று போனதோடு, வங்கிப் பணிகள் பணிகளும் தடைப்பட்டு விட்டது. தொடர்ந்து இரண்டு தினங்களாக வங்கியில் மின்விநியோகம் தடைபட்ட நிலையில், வங்கியில் ஜெனரேட்டர் இருந்தும் பயன் இல்லை.
இன்வெர்டர் யுபிஎஸ் மூலமும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டு, பண பரிவர்த்தனை அனைத்தும் தடைபட்டது. இதனால் அவசர தேவைக்காக வங்கிக்கு பணம் கேட்டு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். வீட்டு விசேஷம், திருமணம், திருவிழா மட்டுமின்றி விதைப்பு பணிகள் நடைபெறும் நேரம் என்பதால், வேலையாட்கள் மற்றும் உழவுக்கு பண கொடுக்க வேண்டிய கட்டயாம் போன்ற காரணங்களுக்காக நகை கடன் கேட்டு வந்தவர்களும், விவசாய கடன் மற்றும் தனிநபர் கடன் கேட்டு வந்தவர்களும் மட்டுமின்றி வங்கிக் கணக்கில் பணம் பணம் செலுத்துவதற்காகவும், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் வந்தவர்களும் கடந்த தினங்களாக செய்வதறியாது தவித்ததோடு வங்கியின் முன்பு கூட்டமாக கூட்டமாக நின்று விட்டு வேறு வழியின்றி திரும்பி சென்றனர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் வாடிக்கையாளர்கள் பின்தங்கிய பகுதியில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் வங்கி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து வேப்பூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் சரவணனிடம் கேட்டபொழுது, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழை பெய்தபோது வங்கிக்கு மின் விநினியோகம் செய்யப்பட்டு வந்த மின்மாற்றி திடீரென பழுதடைந்தது. இது குறித்து நாங்கள் புகார் தெரிவித்தும் மின்வாரியத்தினர் எங்களுக்கு சரி செய்து தரவில்லை. இதனால் இரண்டு தினங்களாக மிகவும் சிரமப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் வங்கியில் இருந்த ஜெனரேட்டர் பழுதாகிவிட்டது. அதனை சரி செய்வதற்காக அனுப்பி இருக்கிறோம் என்றார்.