ஷெரோ விருதுகள் – சுஹாசினி, ராதிகா பங்கேற்பு

ஷெரோ ஹோம் ஃபுட் அமைப்பு கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. சாதிக்கவும் சம்பாதிக்கவும் ஆர்வமுள்ள இல்லத்தரசிகளுக்கு வாய்ப்பு வழங்கும் இந்த அமைப்பின் மூலம் தென்னிந்தியாவில் 500க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளனர். பெண்கள் தங்கள் சமையல் அறையிலிருந்தே தங்களுக்கான வருமானத்தை உருவாக்கிக் கொள்வதன் அவசியத்தை ஆராய்ந்த ஷெரோ புட் டெக்னாலஜியின் நிறுவனர்கள் தங்கள் 20 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் இதனை சாத்தியப்படுத்தி உள்ளனர்.

எளிய வீட்டுப் பெண்களும் வாரத்திற்கு 30,000 ரூபாய்வரை சம்பாதிக்கும் வகையில் ஷெரோ புட் டெக்னாலஜி நிறுவனம் அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. மற்ற உணவு வீட்டு தயாரிப்பாளர்கள் போல ஒவ்வொரு வீட்டிலும் இல்லத்தரசிகள் சமைக்கும் பட்டியலை பின்பற்றாமல் ஷெரோ தனியே ஒரு உணவுப்பட்டியலை  தயாரித்து அதன்படி இல்லத்தரசிகளுக்கு பயிற்சி  வழங்கி சூப்பர் செஃபாக உருவாக்கியுள்ளனர்.

மேலும் அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இந்த ஆண்டிற்கான விருது  வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. 

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிக்காக வழங்கப்படும் இந்த விருதுகள் நல்ல சமையல் செய்த கைக்கு தங்க வளையல் போடலாம் எனும்  பழமொழியை நிரூபிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்த ஷெரோ விருது வழங்கும்  விழாவில்  திரைப்பிரபலங்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டனர். 

அப்போது ஷெரோ ஹோம் ஃபுட் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜெயஸ்ரீ திலக்,  நடிகைகள் சுகாசினி மணிரத்னம் மற்றும் ராதிகா சரத்குமார்,சுபத்ரா,காயத்ரி  உள்ளிட்டோர் கலந்துகொண்டு  சாதனை பெண்களுக்கு விருதுகளை வழங்கினர்.

விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது பேசிய நடிகை  ராதிகா, “ நானும்  சுஹாசினியும்  42 ஆண்டுகள் தோழிகளாக  இருக்கிறோம். அவர் மிகவும் பொறுமைசாலி. ஆனால் நான் பொறுமையாக இருக்க மாட்டேன். திறமையான பெண்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் என்னை அழைத்தமைக்கு நன்றி. எங்களைப்போன்ற பிரபலங்களுக்கு பாராட்டுக்கள், விருதுகள் கிடைப்பது பெரிதல்ல.

வீட்டில்  இருக்கும் பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்குவது  உண்மையில் பாராட்டுக்குரியது இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.  அனைவரும் பிரபலங்களாக உருவாக முடியாது இருந்தாலும் அனைவரும்  இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ராணியாக இருப்பது மகிழ்ச்சி” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சுஹாசினி, “ திரையுலகில் என் குரு ராதிகாதான். சினிமாவில் நாங்கள் நடிக்கும்போது எங்களுக்கு கிடைக்கும் பாராட்டுகளின் மூலமே நாங்கள்  இளமையோடு இருக்கிறோம். அதேபோல்  ஒவ்வொரு ஆணும்  தங்களது மனைவிகளை  பாராட்ட வேண்டும்.  அப்போதுதான் அவர்கள் இன்னும் சாதிக்க கூடியவர்களாக இருப்பார்கள்” என்றார்.

சுஹாசினிக்கு அடுத்ததாக பேசிய மருத்துவரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான எழிலன் பேசுகையில், “தமிழர்கள் உழைக்க கூடியவர்களாக இருப்பார்கள் ஆனால் தொழில் முனைவோர்களாக இருக்கமாட்டார்கள்  என்பதை shero home food நிறுவனர் திலக் மாற்றியமைத்துள்ளார். திராவிடர் மாடல் ஆட்சியில் பெண்களின் திறமைகளை வளர்க்கும் முயற்சியில் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.