வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கடலுக்கு செல்லும் 500 கன அடி வைகை தண்ணீர்

ராமநாதபுரம் வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 500 கன அடிக்கும் மேற்பட்ட தண்ணீர் கடலுக்குச் செல்லும் நிலை உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டப் பாசனத்துக்கு வைகை அணையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இத்துடன் மதுரை பகுதிகளில் பெய்த மழை நீரும் சேர்ந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணைக்கு 4,500 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது.

இத்தண்ணீரை பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு வைகை வலது, இடது பிரதானக் கால்வாய்கள், கூத்தாங் கால்வாய், பரளையாறு, களரி கால்வாய், கீழ நாட்டார் கால்வாய் மற்றும் வைகையாறு மூலம் ராமநாதபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றுக்கு பொதுப்பணித் துறையினர் தண்ணீர் அனுப்பி வருகின்றனர்.

புல்லங்குடி அணைக்கட்டில் இருந்து புல்லங்குடி, சித்தார் கோட்டை, தேர்போகி, அத்தியூத்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இக்கண்மாய்களுக்கு சென்றதுபோக மீதி சுமார் 500 கன அடி நீர் கடலுக்குச் செல்கிறது.

புல்லங்குடி அணைக்கட்டுக்குச் செல்லும் தண்ணீர் அதிகளவில் சென்றதால் தொருவளூர் கால்வாய்க்குச் சென்றது. தண்ணீர் அதிகமாக வந்ததால் தொருவளூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை பொதுப்பணித் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்தனர்.

மேலும் புல்லங்குடியில் உள்ள செங்கல் சூளைகளுக்குள் தண்ணீர் சென்றதால், அங்கிருந்து தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். மாவட்டத்தில் பல கண்மாய்கள் நிரம்பாததால் அந்த கண்மாய்களை நிரப்ப பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுக்கு தண்ணீரை திருப்பிவிடுவதை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை நீர்வள ஆதார உதவிச் செயற்பொறியாளர் ஜெய துரையிடம் கேட்டபோது, பார்த் திபனூர் மதகு அணையில் இருந்து பல்வேறு கால்வாய்கள் மூலம் தண்ணீர் பிரித்து அனுப்பப் படுகிறது. மீதி 2,000 கன அடி வைகையாற்றில் விடப்படுகிறது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைகிறது.

கண்மாயின் முழுக் கொள்ளளவை தேக்கினால் வடகிழக்குப் பருவ மழையின்போது கண்மாய் உடைய வாய்ப்புள்ளது. அதனால் தற்போது ஆறேகால் அடி மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் 2000 கன அடி தண்ணீரை தென்கலுங்கு வழியாக சக்கரக்கோட்டை கண்மாய்க்கு 1,000 கனஅடியும், புல்லங்குடி அணைகட்டுக்கு 1,000 கனஅடியும் அனுப்பப்படுகிறது.

இதில் 500 கன அடி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. எந்த கண்மாயும் உடையவில்லை என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.